Sunday, June 14, 2009

மல்லீ

இந்தக் கதை "'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது"
***********************************

"அம்மா பூ கொண்டாந்திருக்கேன்.." என்று சத்தம் கேட்டாலே அது கனகுவாய் தான் இருக்கும். சத்தம் குடுத்த கையோடு முன் அறையில் சவுகரியமாய் உட்கார்ந்து கொள்வாள். கனகு என் மனைவியின் ஆஸ்தான பூக்காரி. தோள் எலும்பு தெரிய வரும் கனகுவுக்கு ஓரத்தில் நரை முடி தெரியும். எப்பவோ கணவன் விட்டுப் போயிருந்தாலும், பெரிய பொட்டு மட்டும் குடுத்தியான முகத்தில் பிரதானமாய் இருக்கும். வீட்டம்மா வெளில போயிருக்கு இன்னிக்கு பூ வேண்டாமென்று நான் சொன்னாலும் விடமாட்டாள். “அம்மா விளக்குக்கு வைக்கவாது நூறு பூ வாங்குவாங்க அப்புறம் உங்கள சண்டை பிடிக்கப் போகுது”ன்னு பிடிவாதமாய் சத்தியாகிரகம் செய்வாள்.

கனகு எனக்கு கல்யாணமான வருடத்திலிருந்து வீட்டிற்கு பூ போட கரெக்டாய் வந்துவிடுவாள். "பத்தாம் நெம்பர் வீட்டுல வேலை செஞ்சிக்கிட்டிருந்தால்ல கவுரி...அவள நேத்து போலீஸுல பிடிச்சிட்டுப் போய் அடி நிமித்திட்டாங்கம்மா...நீங்க நான் சொன்னபோது நம்பல...அவ தான் அந்த வூட்டுப் பிள்ளையோடு செயின களவாடியிருக்களாம்...இந்தக் காலத்துல உழைச்சுத் திங்கிதே நிக்க மாட்டேங்குது இதுல களவாடினா வெளங்குமா..." கொசுறாக ஊர் சேதியெல்லாம் என் மனைவிக்கு அப்டேட் செய்வதே கனகுதான்.

"நானா கேட்டேன்...எனக்கு அந்த கவுரி யாருன்னே தெரியாது...இவளுக்கு யார்கிட்டயாது சொல்லனும் என்கிட்ட அன்யோன்யமா சொல்லறா...சொல்லிட்டுப் போகட்டுமே...பாவம்...நல்ல பூக்காரம்மா...நீங்க எதுக்கு நாங்க பேசறதையெல்லாம் ஒட்டுக் கேட்டுண்டு" என மனைவி கனகுவை சில சமயம் விட்டே குடுக்கமாட்டாள்.

"சித்ரா பௌர்ணமி விளக்க சுத்தி நல்ல பூவு வைங்கம்மா...வீடு நல்ல லெஷ்மி கதாட்சமாய் இருக்கும்" கனகுவுக்கு செண்டிமென்ட் ஜாஸ்தி. "இன்னிக்கு ஜாதி மல்லி ஏலம் எடுத்தேம்மா...மொத போனியே நம்மூட்டுக்குத் தான்...கூட நூறு வாங்கிக்கோங்க...உங்க கை எனக்கு ராசியா இருக்கும்....எம்ம்பொண்ணுக்கும் உன்ன மாதிரி நல்ல நீளமான முடிம்மா...ஆனா வாத்தி புள்ள மக்குன்னு பூ வைடின்னு சொன்ன கேட்டாத் தானே...எல்லாருக்கும்மா நீளமா முடி வாய்க்குது...நீ நிறைய பூ வைம்மா...வீட்டுக்கும் புருஷன் ஆயுசுக்கும் நல்லதும்மா " என மனைவி அவளுடைய சென்டிமெண்டுக்கு எல்லாம் ஈசியாய் மசிவாள்.

"ஏம்மா நீ ஏன் ராகினிகிட்ட மாம்பழத்துக்கு பேரம் பேசி தொண்டத் தண்ணிய வுடுறீங்க...என்னாண்ட சொல்லுங்க நான் வாங்கித்தரேன் எவ்ளோ வேணும்..." சில சமயம் கூடுதல் வியாபாரமும் நடக்கும்.

"இவளுக்கு மாம்பழத்துல கண்டிப்பா கமிஷன் இருக்கும்" என்று நான் சொன்னாலும்..."இருக்கட்டுமே நமக்கு எனிவே இந்த விலைக்கு கிடைக்காது....அவளும் பொழச்சிக்கட்டுமே...அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்குங்க...எல்லாமே வயத்துக்குத் தானே" என்று எனக்கு பதில் உபதேசம் தான் கிடைக்கும்.

"மல்லீ வந்திருக்கு...."ன்னு ஒரு நாள் வயதுப் பெண் வந்த போது எனக்கு அது கனகுவின் பெண் என்று தெரியவில்லை.

"இங்க வழக்கமா ஒரு அம்மா பூ போடுவாங்க...அம்மா அவங்க கிட்ட தான் வாங்குவாங்கம்மா.."ன்னு சொன்னவுடன் அவளுக்கு முகத்தில் ஏகப் பெருமை.

"அண்ணா அது எங்கம்மா தான்ணா...அம்மாவுக்கு காய்ச்சல் அதான் நான் வந்திருக்கேன்.."

"ப்ள்ஸ் டூ படிக்கிறன்னாங்களே உங்க அம்மா ...நல்லா படிக்கிறியா...நல்ல படிச்சு வேலைக்கு போகனும் என்ன" என் மனைவிக்கு அவளை தெரிந்திருந்தது. நான் அவள் பெயர் கேட்டுக்கொள்ளவில்லை ஆனால் அவள் மல்லீ என்று ராகம் போட்டு விற்பதால் அவளை மல்லீ என்றே அழைப்பேன். அவளும் வாய் நிறைய அண்ணா அண்ணா என்று அழைப்பாள்.

"ஏண்ணா...அண்ணிக்கு கூட கொஞ்சம் பூ வாங்கி வைங்கண்ணா..நேத்து அம்மன் கோயிலாண்ட பார்த்தேன் ப்ளூ சாரியில அண்ணீ சூப்பராய் இருந்தது..." - கனகுவின் வியாபார உத்தி அப்பிடியே இவளிடம் இருக்கும் செண்டிமென்ட் உள்பட. ஒரு தரம் எங்கள் வீட்டு நிலைவாசலில் ஒரு துண்டு மல்லிகை மாட்டியிருந்தது.

"நாந்தாண்ணா வைச்சேன்... நிலைவாசல்ல பூ வைச்சா வீட்டுல சந்தோஷம் பெருகும்ன்னு அம்மா சொல்லுவாங்க..அதான் வைச்சேன்"

"மல்லீ...நீ பூ விக்க வேண்டியவளே இல்ல...நல்ல படிச்சு கார்பரேட்ல வேலை பார்க்க வேண்டியவ...நல்ல மார்க்கெட்டிங் டெக்னிக்"ன்னு நான் சொன்ன போது அவள் முகம் பிரகாசமாயிருந்தது.

அதற்கப்புறம் கொஞ்ச நாளில் கனகு அம்மன்கோவில் பக்கம் ஒரு சின்ன கடை போட்டுவிட்டாள்.

"சுகர் வந்திருச்சிம்மா அலைய முடியலை அதான் கைல இருக்கிறதையெல்லாம் போட்டு கடைய ஏலம் எடுத்திருக்கேன்...உனக்கு வேணா மகள வீட்டுல வந்து குடுக்கச் சொல்லட்டுமா"

"இல்ல பரவாயில்ல படிக்கிற பொண்ணு...நானே வந்து வாங்கிக்கறேன்...டெய்லி இத சாக்கா வைச்சாவது அம்மன்கோயிலுக்கும் வருவேன்" என் மனைவிக்கும் கனகுவின் தொடர்பை விடப் பிடிக்கவில்லை. இரண்டே வாரம் தான். கனகு மீண்டும் வீட்டிற்கே பூ போட வந்தாள்.

"என்னத்த சொல்றது என் தலையெழுத்து...அந்த நீலவேணி நான் அவ கடைய ஏலமெடுத்தேன்னு என்னைய ஆள வைச்சு தகராறு பண்றாம்மா...குடிச்சிப்புட்டு வீட்டுப் பக்கமும் வந்துட்டாங்க..வயசுப் புள்ளைய வைச்சிக்கிட்டு நமக்கு ஆள் இருக்கா அம்பு இருக்கா...அதான் கடைய விட்டுக்கொடுத்திட்டேன்...இப்போ குத்தைகாரன் கிட்ட காசுக்கு அலைஞ்சிகிட்டு இருக்கேன்...எனக்கு இது தேவையா... ஆனா நல்ல வாழற உங்க வீட்டுல வைச்சு சொல்லக்க்கூடாது அவ அதுக்கு அனுபவிப்பாம்மா...அந்த அம்மன் அவளுக்கு கொடை கூலி குடுக்கும் பார்த்துக்கிட்டே இருங்க.."

எல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கப்புறம் மீண்டும் கனகுவை வீட்டுப் பக்கம் காணவே இல்லை. என் மனைவிக்கு பூ வாங்குவதை விட அவளைப் பற்றியே கவலையாய் இருந்தது. "ஏங்க கொஞ்சம் விசாரிங்க...அவ கிட்ட காசுக்கு அவங்க ஏதாவது தகறாரு பண்ணியிருப்பாங்க"ன்னு என்னை கொஞ்ச நாள் நச்சரித்துக்கொண்டிருந்தாள்.

"நான் எங்க போய் விசாரிப்பேன்...டோன்ட் வொர்ரி அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது..." என்று நான் சொன்னாலும் எனக்கும் அதே சந்தேகம் தான் இருந்தது.

"கனகு வீடு பூட்டியிருக்கு அவ வீட்டைக் காலி பண்ணிட்டாளாம்..பக்கத்து விட்டு சுலோச்சனாம்மா வீட்டு வேலைக்காரி சொன்னாளாம்" என்று என் மனைவி சொன்ன போது பூக்கடையில் கூட இவ்வளவு பாலிடிக்ஸா என்று எனக்கு வருத்தமாய் இருந்தது.
"கவலப் படாத...அவ நல்லா தான் இருப்பா...எத்தனை தரம் நமக்கே பூ குடுத்து ஆசிர்வாதம் பண்ணியிருக்கா அந்த நல்ல மனசுக்கே அவளுக்கு எங்க போனாலும் நல்லா தான் இருப்பா " என்று சமாதானம் மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. அதற்கப்புறம் சில மாதங்கள் பிறகு கனகுவை மறக்கவில்லை என்றாலும் அவளைப் பற்றி நானும் மனைவியும் அதிகம் பேசவில்லை. என் மனைவி மனதே இல்லாமல் அம்மன் கோயில் கடை தவிர்தலாக மற்ற கடைகளில் பூ வாங்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.

ப்ளஸ் டூ வில் அந்த தரமும் மாணவிகளே அதிக மதிப்பெண் எடுத்தார்கள் என்று பேப்பரில் படித்த போது எனக்கு மல்லீயின் நியாபகம் தீற்றலாய் வந்தது.

பின்னொரு நாளில் மெடிக்கல் ஷாப் சேகரிடம் பேசிக்கொண்டிருந்த போது அந்த முரட்டு மீசை ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்க வந்தான். கனகு பற்றி சும்மா கேட்பது மாதிரி அவனிடம் கேட்டேன்.

"அதெல்லாம் அன்னிக்கே ஃபைசல் பண்ணியாச்சு சார்...அவ காசு எனக்கெதுக்கு சார்...நான் விளங்க வேண்டாமா...அதெல்லாம் கனகு செம உஷார் பார்ட்டி சார்...மேட்டர் வேற சார்...அவ புள்ள... பூ போடற வீட்டுல காதல் பண்ணி இழுத்துகிட்டு ஓடிப் போயிரிச்சி. அப்புறம் அவங்க போலிஸ்ல சொல்லி கனகு வீட்டைக் காலி பண்ணிரிச்சி. ரெண்டு மாசம் மின்னாடி கண்டுபிடிச்சி.. அவங்க பையன கூட்டிட்டு போயிட்டாங்க..இப்போ கனகும் அந்தப் புள்ளையும் எம்ஜியார் நகர்ல வீடெடுத்திருக்கிறதா பசங்க சொன்னாங்க.” எனக்கு கனகுவைப் பற்றி ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. அதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் கிளம்பிவிட்டேன்.

அப்புறம் எம்ஜியார் நகர் கடக்கும் போது நியாபகம் வரும் போதெல்லாம் கனகு எங்கேயாவது தட்டுப் படுகிறாளா என்று பூக்கடையெல்லாம் பார்ப்பேன்.

ஒரு நாள் என் மாமியாரை அயோத்யா மண்டபத்தில் கச்சேரிக்கு ட்ராப் செய்துவிட்டு வரும் போது வெஸ்ட் மாம்பலத்தின் ஒரு சந்தின் திருப்பத்தில், முற்றிலும் எதிர்பார்க்காத தருணத்தில் மல்லியைய் சந்திக்க நேர்ந்தது. ட்ராபிக் நகர காதிருந்த போது "மல்லீ..." என்று தெரிந்த குரல் கேட்க தலை அனிச்சயாய் திரும்பியது.

ஒரு குட்டி ஒன்டிக் குடித்தனத்தில் வாசலில் டேபிளில் மல்லிகையும் கனகாம்பரமும் அடுக்கி மல்லீ விற்றுக்கொண்டிருந்தாள். கனகு ஒரு பெட்டியை வீட்டிற்குள் நகர்த்திக் கொண்டிருந்தாள், நான் பார்த்த மல்லியா இது என்று எனக்கு தூக்கிவாரிப் போட்டது. தலை மொட்டையடித்து வளரவே விடாமல் ஒட்ட கிராப் செய்யப் பட்டிருந்தது. மூக்குத்தி குத்தியிருந்தாள். அந்த சந்தர்பத்தில் ஒதுங்கி இருக்கும் அவர்களை சந்தித்து நோகடிக்க விரும்பவில்லை. என் மனைவியிடம் சொல்லி உதவி செய்யச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

முகத்தைத் திரும்பி கிளம்பும் போது தான் கவனித்தேன்...அவர்கள் வீட்டு நிலைவாசலில் பூ மாட்டியிருந்தது.

Wednesday, May 13, 2009

அன்புள்ள தங்கமணிக்கு...

வாவ்...இந்தப் புடவை எப்போ எடுத்தோம்...இதுல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா...அப்படியே ஜன்னல் பக்கத்துல வானத்துல காக்காய பார்க்கற மாதிரி கன்னத்துல கைய வெச்சிண்டு ஒரு போஸ் குடு...டக்குன்னு கேமிரால பிடிச்சுடறேன்...என் அடுத்த படத்துக்கு இந்த மாதிரி ஒரு ப்யூட்டிய தான் தேடிண்டு இருந்தேன்....

தேங்ஸ் பட் நோ தேங்க்ஸ்..தெளிவாவே சொல்லிடறேன்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி என்னால சப்பாத்தியும் சன்னா மசாலாவும் பண்ணவே முடியாது...!!!!!!

சே மனுஷன் சன்னா மசாலாவுக்கெல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதாப் போச்சு...சனியன் நானும் அத எவ்வளவு வருஷமா பண்ணிப் பார்க்கறேன் ஒரு தரமாவது நல்லா வந்து தொலைய மாட்டேங்குது...நீயும் அடுக்களையில எவ்வளவு தான் கஷ்டப்படற...இதுக்கு தான் ஒரு வெள்ளக்காரிய வீட்டோடு கொண்டு வந்துடறேன்னு சொல்றேன்...அவளும் கூட மாட ஹெல்ப் பண்றதோட அக்கா அக்கான்னு உங்கிட்ட ஆசையா இருப்பா...நீ தான் கேக்க மாட்டேங்கிற

ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...நம்ம அடுத்த தெரு ஆப்பிரிக்க நண்பர் எப்படி வசதி...?

அடிப்பாவி அந்த ஆள் "கேய்"ன்னு தெரிஞ்சு பழிவாங்குறியா...அவன் ஆள் இருக்கிற சைஸ்சுக்கு...உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....

என்னடி கெக்கபிக்கன்னு பார்த்துண்டு இருக்க...ஹோம்வொர்க்க எடுத்துண்டு வா. டி.வி.யப் பார்க்காம அந்த சோபால என்ன பார்த்து இப்படி திரும்பி உட்காரு...கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆகும். இந்தா இந்த டி.வி ரீமோட்ட பக்கத்துல வைச்சிக்கோ...மாடிலேர்ந்து அம்மா கீழ இறங்கி வர்ற சத்தம் கேட்டா டி.விய டக்குன்னு ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன் பக்கத்துலேயே வெச்சிக்கோ. இல்லைன்னா அப்புறம் டீ.விய பார்த்துண்டே ஹோம்வொர்க் பண்றன்னு உன்ன தான் சத்தம் போடுவா...

அம்மா....டீ.வில பில்லா போடறான்...அப்பா நயன் தாரா பார்க்கறார்....

தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னான்...ஒரு மட்டு மரியாதையே தெரியல உனக்கு.....இப்படியா நயன் தாரான்னு மண்டைல அடிச்ச மாதிரி சொல்றது...சித்தின்னு அழகா சொல்லுடா...சரி சரி உக்காரு...உடனே எழுந்து போய் மாடில உங்கம்மா கிட்ட ஊத வேண்டாம்..இன்னிக்கு கோட்டா அல்ரெடி ஓவர்...நாளைக்குப் பார்த்துக்கலாம்...ஹூம்...சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...

டாட் ...ஷீ இஸ் புல்லியிங் மீ....நான் தானே உங்க கடைசிப் பொண்ணு....ஷீ சேஸ் ஷி இஸ் தெ ஒன்

அவ சொன்னா சொல்லட்டும்...கண்டுக்காத...அதெல்லாம் இருக்கட்டும்...இங்க பாருடா செல்லம்...நான் உன்கிட்ட முன்னாடியே நிறைய தரம் சொல்லி இருக்கேன்...நீ என்னோட ரெண்டாவது பொண்ணுன்னு சொல்லிக்கோ ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் ஓ.கேவா...

குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.

நீங்க வாழ்க்கையில எடுத்த ரெண்டாவது கரெக்ட் முடிவு காமிராக்கு பின்னாடி நிக்கனும்ன்னு எடுத்த முடிவு தான்....

என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கர புத்திசாலி....உன்னளவுக்கு நான் போறாது...

என்னாச்சு இன்னிக்கு உண்மையெல்லாம் பயங்கரமா ஒத்துக்கறீங்க...?

ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...


அன்புள்ள தங்கமணிக்கு...தந்தை மகளுக்கு எழுதிய கடிதம், மகள் தந்தைக்கு எழுதிய கடிதம் வரிசையில் புருஷன் பெண்டாட்டிக்கு எழுதிய கடிதமாக இந்நேரம் இநத பதிவு மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம் (ஹீ ஹீ) . நம் மணவாழ்க்கையில் அஃபீஷியலாக பத்து வருடம் ஓடியே விட்டது. திரும்பிப் பார்க்கிறேன், ஓரமாய் நின்று பார்க்கிறேன் ஒன்றரைக் கண் விட்டுப் பார்க்கிறேன் என்று போரடிக்காமல் நேர விஷயத்திற்கு வருகிறேன். எத்தனையோ தரம் நீ சொல்லி நான் மறுத்திருந்தாலும்.....தஙகமணியில்லையேல் டுபுக்கில்லை என்று இன்று ஒத்துக்கிறேன். எனது வாழ்வில் நகைச்சுவையை மேம்படுத்தியது நீ தான் என்று ஒத்துக்கொள்கிறேன். எதைச் சொல்வேன் கண்மணி...தெள்ளிய நீரோடையில் வெள்ளியென..என்று ப்ளாக் கிடைத்ததே என்று ஓவராய் ஃபிலிம் காட்டாமல் "காக்க காக்க" ஜோதிகா மாதிரி (நினைப்பில்) நீ நம் வீட்டு கர்டன்களை திறந்துவிட்டு என்னைப் பார்த்து பேசும் டயலாக்கிற்கு அதில் என்றும் ஒரு சிறப்பிடம் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

சொந்தக் கவிதை எழுதி டார்ச்சர் பண்ணாமல்...சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, நமக்கு மிகவும் பொருந்தும் சினிமா பாட்டையே போட்டுவிடுகிறேன்

நீ கோபப் பட்டால்...நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால்...நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால்...நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால்...நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால்...நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்....உயிரை விடுவேன் (சும்மா உல்லாகட்டிக்கு)
நீ கேக்காமல் போனாலும்...கத்தி சொல்லுவேன்...பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)


எனக்குத் தெரியும் என்ன தான் வில்லு படத்திலேர்ந்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் நீ சென்டி ஆக மாட்ட....அதே தான் கரெக்ட்...இந்த வாரம் சப்பாத்தி சன்னா மசாலா...அதே தான்...ப்ளீஸ்...சினிமாலேர்ந்து பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி போட்டிருக்கேன்....ஏதோ பார்த்து செய்யுங்க மேடம்...

Wednesday, April 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.8

இந்த தரம் ஒரு குறும்படம்.

தேர்வு சமயம், தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம்/ கால கட்டம், உறைய வைக்கும் மைனஸ் நான்கு டிகிரி குளிர்...தொடர்ந்து அரைமணி நேரம் வெளியே நின்றால் நடுவில் முடிந்த போது காரிலோ பக்கத்தில் இருக்கும் கடையிலோ வீட்டிலோ போய் ஹீட்டரில் கை கொஞ்சம் குளிர் காய்ந்து ஏகப்பட்ட கமிட்மெண்டுடன் நடித்துக் கொடுத்த மூவருக்கும் மனமார்ந்த நன்றி. அதை விட ஏதோ கத்துக்குட்டி கேட்கிறானே என்று பெருந்தன்மையாய் அவர்களை நடிக்க அனுமதித்த அவர்களது பெற்றோர்களுக்கு கோடானு கோடி நன்றி.

இது மூன்றாவது குறும்படம் தான். இன்னும் கற்றுக்கொள்ளும் மாணவனாய் எடுத்த படம் தான்.எந்த வித பொரஃபஷனல் உபகரணங்களையும் உபயோகப் படுத்தாமல் சாதாரண கேம்கார்டரில் எடுத்த படம் தான். ஏதோ பார்த்து பெரிய மனது பண்ணி உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள், நன்றியுடையவனாய் இருப்பேன். இப்பொழுது வெகு சமீபத்தில் கேமிரா உட்பட பொரபஃஷனல் சமாச்சாரங்கள் வாங்கியுள்ளேன் அதனால் அடுத்த குறும்படத்தில் ஒலி மற்றும் ஒளி இன்னும் கொஞ்சம் தரமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் (படத்தின் தரம் அல்ல :) ). மற்றபடி அதே படபடப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் உங்கள் பின்னூட்டத்திற்கு காத்திருக்கிறேன்.

Monday, April 27, 2009

உதவி - வருத்தங்கள்

போன பதிவில் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி கேட்டிருந்தேன். வந்த பின்னூட்டங்களில் ஸ்ரீதர் நாராயணன் உங்களின் இந்த பதிவே பொறுப்பில்லாமல் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவரின் அந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். விஷயத்தை விவரமாய் கூறாமல் ஏனோ தனோ என்று போட்டதில் வட தென் துருவங்களுக்கு போய் வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்கு பதில் அவர் ஏதோ அம்மாபட்டிக்கு போய் வந்த மாதிரி ஆகி, டி.வி.யில் அரைமணி நேர கச்சேரி ஸ்லாட்டுக்கு பிச்சையெடுப்பது மாதிரி ஆகிவிட்டது. பத்ரியின் அரைமணி நேர டி.வி. ஸ்லாட் பின்னூட்டம் எனக்கு மிக மிக எள்ளும் தொனியில் பட்டது (and felt very rude and offensive) ஆனால் தவறில் எனக்கும் பங்கு உண்டு. விஷயத்தை இன்னும் விவரமாய் பதிந்திருக்கலாம்.


விஷயத்துக்கு வருவோம். வட துருவத்துக்கோ தென் துருவத்துக்கோ ஏதோ ஒரு துருவத்துக்கு போவதே பெரிய விஷயம். இதைப் பற்றி சில ஹாலிவுட் படங்களே எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த ஸ்பான்சரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருப்பதாக நண்பி பொயட்ரீ கூறுகிறார்.

பத்ரீ மற்றும் ஸ்ரீதர் நாராயணன் கூறிய குறிப்புகள் பதிவுகள் அவர் அப்பொழுதே இங்கே மற்றும் இங்கே லைவாக விவரமாக அன்றாட குறிப்புகளாக படங்களுடன் பதிந்திருக்கிறார்.

இவரின் இந்த இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி தகவல் சரியான முயற்சி இல்லாமல் இந்த பெருமை சரியாக வெளியே வராமல் போய்விட்டது. இப்பொழுது சமீபமாக 2010ல் இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் ஒரு பெண்மணிக்கு "இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் முதல் இந்தியப் பெண்மணி" என்ற தவறான பட்டத்தை ஊடகங்கள் வழங்குவதைப் பார்த்து நண்பி பொயட்ரீ கொதித்துப் போய் எழுந்து உதவ முடியுமா என்று கேட்டு வந்தார். அதுவும் எப்பொழுது.. செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களையும் ஆன மட்டும் தொடர்பு கொண்டு எழுதி பயனில்லாத போது.2010ல் பயணிக்கப்போகும் பெண்ணின் குழு அமைப்பாளருடன் பேசியும் பயனில்லை. எல்லாமே (Daily India, ANI International and Felicity Aston) கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறேன் - முன்னால் அவர் எனது ப்ளாகில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் நண்பி பொயட்ரீயை எனக்கு இந்த விஷயத்தின் போது தான் அறிமுகம் கிடைத்தது. நம்மூர் பெண்மணியின் பெருமையை யாருக்கோ வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆன மட்டும் முட்டிப் பார்த்துவிட்டேன் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாகவாவது செய்தியைப் பரப்பி உதவி கிடைக்குமா என்று கேட்ட போது உடனே பதியவேண்டும் என்று தோன்றியது.


நான் பதிவில் போட்டதை மற்றவர் உல்டா பண்ணிப் போட்டாலே கோவம் வருகிறது, பதிப்புலகில் இதுவே பெரிய சர்ச்சையாகுகிறது...ஆனால் ஒருவர் 2007ல் "முதல் இந்தியப் பெண்மணி" என்ற பெற்ற சாதனையை இப்பொழுது மறுக்கப்படும் பொழுது கொதிக்கவே செய்கிறது. இவரின் இந்த சாதனை முதலில் இமயத்தை தொட்ட இந்தியப் பெண்மணி, முதலில் விண்வெளிக்குப் போன இந்தியப் பெண்மணி என்ற வரிசையில் தான் நான் பார்க்கிறேன். இதுவே இதே இடத்தில் கல்பனா சாவ்லாவாக இருந்த்திருந்தால் உதவி புரிந்திருக்க மாட்டோமா? "ப்ளாக்ல போடு சந்தோஷப் படு அதுவே பெரிய சாதனை தான் ....ஐய்யோ வரலையேன்னு புலம்பக் கூடதூன்"னு பின்னூட்டம் போட்டிருப்போமா? அதுவும் பதிப்புலகில் இருக்கும் பத்ரி மாதிரியான ஆட்கள் இதைச் சொல்வது மிக மிக வருத்தமாய் இருக்கிறது. கல்பனா சாவ்லா மாதிரி சாதனையில் இது எந்த விதத்தில் குறைந்து விட்டது? உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவயில்லை...டி.வியில் அரைமணி நேர ஸ்லாட் என்றெல்லாம் அடுத்தவரின் சாதனையை ரொம்பவே கேவலப் படுத்தாதிர்கள்.

என் போன்ற ப்ளாகில் செய்தி வருகிறது என்பதால் அவரின் சாதனை எந்த விதத்திலும் குறைந்ததில்லை

Sunday, April 26, 2009

உதவி

எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.

Sunday, March 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.7

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6

"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.

"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"

"....?"

"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"

பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?

சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.

கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.

ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.

அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.

அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.

Monday, March 09, 2009

ஹாலிடே - குறும்படம்

ரொம்ப நாளாய் ஃபிலிம் காட்டிக்கொண்டிருந்த இரண்டாவது குறும்படம் ஹாலிடே உங்கள் பார்வைக்கு. முதல் குறும்படதின் அதே உதறலுடன் உங்கள் கிழிச்சுலு தொங்கப்போடலுவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்ச நாளாய் லண்டன் ஃபிலிம் அக்காடமியில் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகும், எடிட்டிங்கின் போதும் இந்த படதில் சில குறைகள் தெரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் இடம் பொருள் ஏவல் வைத்துப் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது. இதையே வேறு முறையில் சொல்லலாம் என்று இப்போது தோன்றினாலும் அதையெல்லம் பின்னொரு நாளுக்கு பின் தள்ளி இப்போது உங்கள் பார்வைக்கு. ஆனால் அதற்கு முன்

இடம்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தாலாவது ஏதாவது லாஜிக் இருக்கும், ஆனால் கமர்கட்டு வாங்கப்போய் கழுதை வாங்கி வந்தால்? வாழ்த்து சொல்லப் போன இடத்தில் மண்டபம் பிடித்து அங்கேயே உடனேயே கல்யாணம் செய்துகொண்ட கதையாய் ஹாலிடேக்கு போன இடத்தில் மனதுக்குப் பிடித்துப் போய் குறும்படம்.

பொருள்

கதை திரைக் கதை எல்லாம் ரூம் போட்டு யோசிக்க டைம் இல்லாமல் டாய்லெட்டில் கூட பத்து நிமிஷம் தியானம் செய்து மிச்சத்தை களத்திலேயே மானே தேனே பொன்மானே போட்டு எடுத்தது. கையில் ஒரு டப்பா கேமிராவும் 60 வாட்ஸ் பல்பும் போடறதுக்கு ஒரு ப்ளாகும் இருந்தா மனசுல பெரிய டைரடக்கர்ன்னு நினைப்பான்னு திட்டாதீர்கள் நிறைய எனக்கு நானே கேட்டாகிவிட்டது.

ஏவல்

பள்ளிக்கூடத்துல ஆபிஸுலன்னு எவ்வளவு நடிச்சிருப்போம் எல்லாம் அத மாதிரி தான்..நீங்க சும்ம போட்டோக்கு போஸ் குடுக்கிற மாதிரி நின்னா போதும் மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்னு அரி அரின்னு அரிச்சதில் இவன் கொசுக்கடி தாங்கலைடான்னு நடிக்க ஒத்துக்கொண்ட இரண்டு புண்யாத்மாக்களுக்கு கோடானு கோடி நன்றி. இவர்கள் ப்ரொபஷனல் நடிகர்கள் இல்லையென்றாலும் வந்த இடத்தில் உடம்புக்கு முடியாத போதும் நான் என்னமோ கோடியைக் கொட்டி எடுக்கிற மாதிரி சின்சியராய் முடித்துகுடுத்ததிற்க்கு ஸ்பெஷல் நன்றி.

சரி சரி இதுக்கு மேலே அப்புறம் நீங்க தம்மடிக்க போய்விடுவீர்கள் என்பதால் இத்தோடு முடிச்சிக்கிறேன்...பார்த்துட்டு என்ன பழிவாங்குறத வாங்குங்க ....ஐ ஆம் தி வெயிட்டிங் :)

யூ டியூப் வழக்கம் போல் படத்தின் தரத்தை குறைத்துள்ளது. புல் ஸ்க்ரீனில் பெரிதுபடுத்திப் பார்த்தால் பிக்சல்கள் பிசிறடிக்கின்றன.



யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=7cl_soBE8IM

Tuesday, March 03, 2009

தமிழ்மண விருது - நன்றி

குழப்பங்கள் அதிகமாகும், மன உளைச்சல் தீவிரமாக இருக்கும். பணம் விரயமாவதை தவிர்த்தல் நல்லது. அடுத்த வீட்டுக்காரர் குட்மார்னிங் சொல்ல மாட்டார். வீட்டு ஆட்டுக்குட்டிக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று வரும் பேப்பர் ஜோசியம் மாதிரி கொஞ்சம் நிஜமாகவே குழப்பம் இருக்கிறது. கவனம் வேறு இப்போது வேறு பக்கத்தில் இருக்கிறது. அதனால் தான் இங்கே கொஞ்ச நாளாக எழுதவே இல்லை. இங்கே கூடுதலாக கொஞ்சம் லீவு போடலாம் என்று வேறு எண்ணம். இந்த சமயத்தில் தமிழ்மணம் விருதுகள் ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது.


வழக்கமாக போட்டி வெச்சிருக்காங்க ஐய்யா போய் வோட்டு போடுங்கன்னு சொல்லுவேன்...நீங்களும் உங்களுக்கில்லாமயான்னு போய் வோட்டு போடாம கரெக்ட்டா கவுதிருவீங்க. ஆனா இந்த தரம் என்னம்மோ சொல்லாமலே உங்கள ஏமாத்திட்டேன். பார்த்தா குறும்படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைசும், நகைச்சுவை பிரிவில் மூனாவது இடமும் கிடைச்சிருக்கு. எனக்கே ஆச்சரியம் தாங்க முடியலை...பெரிய மனசு பண்ணி வோட்டு போட்டு செயிக்க வெச்ச அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா...!!!!!

எனக்கு இங்க எழுதாம முடியாது. இங்கே டெய்லி நிறைய பேர் வந்து பார்த்து ஏமாந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஸ்டட் கவுண்டர் சொல்லுது. உங்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப வருந்துகிறேன். ஆனால் ஏனோ தானோன்னு எழுதி கடுப்பேற்றுவதை விட இது எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மென்ட் விடுவது மாதிரி தோன்றலாம் எனக்கும் தெரியும் ஆனாலும் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் அப்படி நினைத்தாலும் இதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்த வாரத்திலிருந்து கண்டிப்பாக முடிந்தாலும் முடியாவிட்டாலும் எழுதுகிறேன். மார்ச் 9ம் தேதிக்கு முன்னால் அடுத்த பதிவு கண்டிப்பாக இருக்கும்.


தமிழ்மண விருதுகளில் தேர்ந்தெடுத்ததிற்க்கு மனமார்ந்த நன்றி.

Saturday, January 24, 2009

உள்ளேன் ஐய்யா

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு சொன்னா "எந்த வருஷத்துக்கு..?"ன்னு கோச்சிப்பீங்கன்னா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா வைச்சிக்கோங்க. பொங்கல்லாம் சிறப்பா கொண்டாடியிரு...சரி வேணாம்...ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? வெக்கமாயில்ல....வேலை மெனெக்கெட்டு இங்க வந்து வாழ்த்து சொன்னா ஒரு மரியாதைக்கு திரும்ப ஒரு வாழ்த்து கூட சொல்ல வேணாம்...சின்னதா ஒரு டேங்க்ஸ் சொல்லக் கூடவா முடியலை..ஏன் எங்களுக்கெல்லாம் வேலையில்லையா...நீ மட்டும் தான் உலக மகா ஆபிஸரா?...திட்டி உங்க வாய் வலிக்க கூடாது..(ஐய்...ஐஸ் ஐஸ்..) நானே திட்டிக்கிறேன்.
புதுவருடம் அமர்களமாக ஆரம்பித்திருக்கிறது. நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. பெரிய இவனாட்டம் சேரிட்டி சேலென்ஞ் என்று இரண்டு சவால்களை எடுத்திருந்தாலும் இரண்டையும் முடிக்கவேயில்லை. ஆனால் அபராதமாக குடுக்க இருந்த தொகையை இரட்டித்துவிடுவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடமாவது முடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். இரண்டு சவால்களில் ஒன்று திரைப்படத்தில் தலையைக் காட்டுவது. ஆனால் சினிமா பித்தம் தலைக்கேறி இருக்கிறது. நடிப்பதற்கு இல்லை டைரடக்கராவதற்கு. லண்டன் ஃபிலிம் அகாடமியில் கோர்ஸ் புக் பண்ணி ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
கிறிஸ்துமஸ் லீவில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன். நம்ம ட்ரேட் மார்க் ஜொள்ளித்திருந்த காலத்தை குறும்படமாக எடுக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. குடும்ப நண்பர் வட்டத்தில் நடிப்பதற்க்கு கேட்டதற்க்கு சரி சொன்னார்கள். பரவாயில்லை நான் இது வரை படமெடுக்கவில்லை என்றாலும் நம்பிக்கை வைத்து சரி சொன்னார்களே என்று ரொம்ப ஃபீலிங்ஸ்காக இருந்தது. அவர்கள் குடும்பத்திற்க்கு இங்கு எக்கச்சக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்காட்லாண்டிற்கு முதல் வாரம் நண்பர்களோடு போய்விட்டு வந்து அடுத்த வாரம் படப்பிடிப்பு என்று ப்ரொடெக்க்ஷன் ப்ளானிங்காயிருந்தது. ஸ்காட்லேண்ட் அருமையான இடம். இவ்வளவு நாள் இங்கிருந்தாலும் இப்போது தான் போகிறோம். நண்பரகளோடு சரி ஜாலியாக இருந்தது. லண்டன்லிருந்து ஸ்காட்லேண்ட்டின் ஒரு அத்த மூலைக்கு பத்து மணிநேரம் காரை ஓட்டிக்கொண்டேடேடே போனதில் போய் சேரும் போது நல்ல இருட்டியிருந்தது. கும்மிருட்டில் ஒரு அத்துவானக் காட்டில் தெக்காலே போய் வடக்காலே திரும்பினால் நீங்க தங்குகிற வீடு இருக்கும் என்று உத்தேசமாய் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இடம் பாலுமேந்திரா படத்தில் வருவது மாதிரி ஒரு பயங்கர காடு. மலைச்சரிவில் ஒரு கார் மட்டுமே போகக் கூடிய பாதை. சரிவில் கீழே தன்னீர் ஓடுகிற சத்தம் வேறு. மலையூர் மம்பட்டியான் பாட்டை பாடிக்கொண்டே போனால் வீடு வருகிற வழியைக் காணும். ஒருவேளை பாதை தவறிவிட்டோமோ என்றால் காரைத் திருப்பக் கூட வழியில்லை. மறக்க முடியாத சரியான திகில் அனுபவம். நம்பிக்கையே இல்லாமல் அப்புறம் எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு இடத்தில் திகில் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு சாமி வந்துவிட்டது. கூட வந்த நண்பர்களை பேசி சம்மதிக்க வைத்து அவர்களும் இல்லாவிட்டால் இவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டாலும் போட்டுவிடுவான் என்று பயந்து போய் சம்மதித்தார்கள். நண்பர்களுக்கும் இங்கே நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஆக இரண்டு படம் என்று ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொக்க்ஷனில் இருக்கிறது :)) சீக்கிரமே ரிலீஸ் பண்ணிவிடுவேன். நீங்க தான் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லவேண்டும்.

அதுனால தான் இங்க எழுத கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இருந்தாலும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கலாம் என்று தான் இந்தப் பதிவு. தோ..... வந்துக்கிடே இருக்கேன்.

நீங்க திட்டினாலும் பரவாயில்லை...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Sunday, December 21, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5

அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.

சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.

செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.

இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.

பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.

அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.

"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."

"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."

"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"

அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.

அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.

அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.

Monday, December 08, 2008

"அச்சமுண்டு அச்சமுண்டு" அருண் - பேட்டி

முக்கியமான அப்டேட் - சினேகாவின் எக்ஸ்க்ளூசிவ் படம் (கடைசியில்) அப்டேட் செய்யப்பட்டுள்ளது..பக்தகோடிகள் க்யூவில் தள்ளுமுள்ளு செய்யாமல் தரிசனம் செய்யவேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - என்றும் இறைபணியில் தர்மகர்தா. படம் அன்பளிப்பு அருண் வைத்தியநாதன்





ஏ எல்லாரும் கேட்டுக்கோங்க பார்த்துக்கோங்க நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி...என்னா கேட்டீங்க தமிழ் திரைப்பட உலகிற்கும் எனக்கும் ஏதாவது சமபந்தம் இருக்கான்னா.. யாரப் பார்த்து என்னா கேள்வி கேட்டீங்கோ....இப்போ ப்ரெஷ்ஷா வந்திருக்காரே அச்சமுண்டு அச்சமுண்டு அருண்....அவர டவுசர் போட்டுக்கொண்டு மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த காலதுலயே எனக்கு தெரியும்ன்னு சொல்ல ரொம்ப ஆசை தான். ஆனா இந்த போஸ்டை அவரும் படிப்பார் அதுனால அப்புறமா அவர் படிக்காத போது சொல்றேன்...:))

அருண் வைத்தியநாதன் - 2004/5 ல் தமிழில் ப்ளாகிக் கொண்டிருந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர். நம்மள மாதிரி ப்ளாகில் ஜொள்ளுவிட்டதை பற்றி எழுதாமல் நியூயார்க் பிலிம் அக்காடமி, குறும்படம்ன்னு லெவல் காட்டிக்கொண்டிருந்தார். இவரின் குறும்படங்கள் பார்த்து அப்பவே இது படிக்கற புள்ள...இவர் பின்னாளில் பெரிய டைரடக்கராக வருவார் என்று துண்டு போட்ட (நம்பிக்கை வைத்த) தொண்டரடிப் பொடியாழ்வாரில் அடியேனும் ஒருவன் (ஹி...ஹீ நல்ல படியில ஏறாத ரோலா பார்த்து மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க அருண் :) ).

ப்ரெண்டு ஒருத்தருக்கு சுகாசினி மணிரத்னம் ரொம்ப தோஸ்த், அதுக்கே நான் "இந்த ஹாசினி இருக்காங்களே நம்பளுக்கு ரொம்ப க்ளோஸ்"ன்னு தான் ப்லிம் காட்டிக்கிட்டு திரியறது. இதுல அருண் வைத்தியநாதனை ஏற்கனவே ஐஸ் பொட்டில பாக்கிங் செஞ்சாச்சு விட்டுருவோமா...பேட்டி பேட்டின்னு கோட்டியா அலைஞ்சு...அவரு நேரம் அவரும் ஒத்துக்கிட்டாரு.



தற்போது அருண் அச்சமுண்டு அச்சமுண்டு தமிழ் திரில்லரை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் ப்ரசன்னா, ஸ்னேகா நடிக்கிறார்கள். ஹாலிவுட் ஜான் ஷியா வில்லனாகவும் படத்தில் இன்னும் நிறைய ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கிறார்கள். "அச்சமுண்டு அச்சமுண்டு" இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் கேமிராவினால் ஹை டெபினிஷனில் படமாக்கப்பட்டு போஸ்ட் பொரடக்க்ஷன் ஸ்டேஜில் இருக்கிறது.

இன்னும் வாயில் நுழையாத ஜார்கனெல்லாம் தட்டுப்படவே அருணையே கேள்விகளால் துளைத்தார் சினிமா நண்டு டுபுக்கார்.

1. வணக்கம் அருண். அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி ரெட் ஒன், ஹாலிவுடின் பிரபல பெயர்கள் என்று என்னவெல்லாமோ பெருமையாக கேள்விப் படுகிறோம். நேரா படம் சம்பந்தப்பட்ட டெக்னிகல் கேள்விகளுக்கு போய் விடுவோம். ஸ்னேகா படத்திற்க்காக அமெரிக்கா வந்திருக்கிறார் என்று படித்தோம். ஸ்னேகாவுக்கு பிடித்த டிபன் என்ன? ஸ்னேகா நம்மூர் இட்லி பூரிக்கிழங்கு சாப்பிட்டாரா இல்லை அந்தவூர் கெல்லாக்ஸ் கார்ன்ப்ளேக்ஸே அட்ஜீஸ் பண்ணிக்கொண்டாரா?

இந்தக் கேள்வியை நான் ஆண்வர்க்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அது என்ன சினேகா பூரி சாப்பிட்டாரா, இட்லி சாப்பிட்டாரா என்றொரு கேள்வி? பிரசன்னாவையும் இந்தக் கேள்வியில் சும்மானாச்சுக்குமாவது சேர்த்திருக்க வேண்டும். ஊரிலிருந்து கிளம்பும் போது, 'We want only American food' அப்டீன்னு சப்புக்கொட்டிட்டுக் கெளம்புனவங்க...நாலாவது நாள், 'கொஞ்சம் ரவா உப்புமா கெடைக்குமா?' என்ற ரேஞ்சுக்கு இறங்கி, நமது உணவுக் கலாச்சாரத்தைப் பேணிக் காத்தார்கள்.

(நீங்க சொல்வது மிக்க சரி அருண்...பிரசன்னா என்னத்தையோ கொட்டிக்கும் போது சினகா இட்லி சாப்பிட்டாரான்னு கேட்டிருக்கனும்...இனிமே கவனமா கேக்கிறேன் )

2. சாப்ட்வேரிலிருந்து ப்ளாக் அடித்து சமபளம் வாங்கினது போதும் சினிமாவுக்கு போகனும்ன்னு என்று எப்படி தோன்றியது. இல்லை சாப்ட்வேரே நானும் கச்சேரிக்குப் போனேன் கதை தானா?

இது சாப்ட்வேர் காலத்தில் தோன்றியது இல்லை -அண்டர்வேர் அணியும் காலத்திலேயே தோன்றியது. ஆனால், அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால், எனது கனவுகளும் 'இனிய பாடல் சண்டைக்காட்சிகளோடு' அவ்வப்போது முடிவடைந்துவிடும். நான் உறுதியாய் இருப்பதைப் பார்த்தவுடன், 'சரி...உனக்குன்னு ஒரு உத்தியோகம் கெடைச்சதுக்கப்புறம், என்ன வேணும்னாலும் பண்ணு!' என்று ஒரு மாதிரி க்ரீன் சிக்னல் கிடைத்தது. சினிமாவுக்குத் தான் தடையேயொழிய, கலை சார்ந்த விஷயங்களுக்கும், சினிமா(க்கள்) பார்ப்பதற்கும் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை என்பது ஒரு ஆறுதல் பரிசு. மனசு எப்போதும் சாப்ட்வேரில் ஒரு கால், சினிமாவில் ஒரு கால் என்று தான் வேலை பார்க்கும் தருணங்களிலும் இருந்தது. சாப்ட்வேரில் வேலை பார்த்தது, கச்சேரிக்குப் போன கதையென்றே சொன்னாலும்...தேங்காய்மூடிக் கச்சேரி கிடையாது! 9லிருந்து 5மணி வரை செய்யும் வேலையில் எனக்கான சலிப்பை அனுதினம் கேட்டு கேட்டு, எனது தங்கமணி (ஹி..ஹி) 'அப்புறம் எப்போ பட வேலையை ஆரம்பிக்கிறீங்க?' என்று கேட்காத குறைதான்!

3. தாலி, தாய்மாமா, காதல், ஆக்க்ஷன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு முதல் படத்திலேயே தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் பார்த்திராத திரில்லர் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்களேன்.

தாய்மாமா மட்டும் தான் நீங்கள் சொன்னதில் இல்லை. தாலி, காதல், ஆக் ஷன் எல்லாம் இருக்கிறது. தாலி எனது கதாநாயகி மாலினியின் கழுத்தில், காதல் செந்தில்குமார் - மாலினியிடத்தில், ஆக் ஷன் எங்கே எப்படி என்பது சஸ்பென்ஸ்! Genre films தமிழில் வரவேண்டும் என்ற ஆசையினாலும், த்ரில்லர்களுக்கு எப்போதுமே மவுசு என்ன கீபோர்டே உண்டு என்பதாலும்...இது போன்றதொரு முயற்சி. சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை சொன்னால், 'அச்சு பிச்சு காமெடி', 'டண்டணக்கா டான்ஸ்' தேவைப்படாது என்ற எனது அபரிதமான நம்பிக்கையின் ஒரு வடிவம் தான் 'அச்சமுண்டு! அச்சமுண்டு!'. குறிப்பாக, இது 'இத்தாலி படத்திலேந்து சுட்டது, ஜெர்மன் படம் 'ப்ரிஞ்சால்'லே இதே சீன் இருக்கு' என்ற அபாயங்களும் இல்லாத படமாக இருக்கும்.

4.படத்தில் லைவ் சவுண்ட் உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள் என்று வேற நல்ல பேட்டிகளில் சொல்லி இருக்கிறீர்கள். ஹே ராமில் கமல் லைவ் சவுண்ட் உபயோகப்படுத்தி, கூட இருந்தவர் "மாப்ள படம் எப்போ போடுவாங்க"ன்னு கேட்டது தான் நியாபகம் வந்தது. ஏன் லைவ் சவுண்ட்...? த்ரில்லர் களம் என்பதால் ஏதாவது ஸ்பெஷல் காரண்ங்கள் உண்டா...?

பேட்டிகளில் நல்ல பேட்டி, டுபுக்கு பேட்டி என்று உண்டா என்ன? இந்தியத் திரைப்படங்களைத் தவிர, மற்ற முக்கால்வாசி நாடுகளில் 'லைவ் சவுண்ட்' முறையில் தான் படங்கள் எடுக்கப்படுகிறது. பாலிவுட்டில் பல பெரிய படங்கள் 'லைவ் சவுண்டு'க்கு மாறி ரொம்ப நாட்களாகி விட்டன. ஆனாலும், இன்னும் இந்தியாவில் பெரும்பான்மையான படங்கள் டப்பிங் முறையில் தான் எடுக்கப்படுகிறது. நீங்கள் சமையல் கட்டில் உங்கள் மனைவியோடு பேசுகிறீர்கள் என்பது தான் காட்சி என்றால், அங்கு கேஸ் அடுப்பு எரியும் சத்தம் கேட்க வேண்டும், ரசம் கொதிக்கும் சத்தம் கேட்க வேண்டும், வசனங்கள் நிஜ வாழ்வில் பேசுவது போலவே இருக்க வேண்டும் ...இத்தனை 'வேண்டும்'களும் வேண்டும் என்றால், லைவ் சவுண்ட் தான் ஒரே வழி. (பின்னணியில் கேட்கும் சத்தங்களில் சவுண்ட் எடிட்டிங்கிற்கும் பெரிய பங்குண்டு). இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் செய்த 'டென்னிஸ்', பல படங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதே போல 'மிக்ஸிங்'கும் 'Grudge','Exorcism of Emily Rose', 'Strangers' போன்ற படங்களை செய்த மார்ட்டி ஹம்ப்ரியோடு ஹாலிவுட்டிலேயே தான் நடக்கிறது. துல்லியமான துள்ளல் ஒலிக்கு நான் கியாரண்டி! (நான் சட்டசபை தேர்தல் கணக்கா வாக்குறுதிகளை அள்ளி வீசறேன்...மவனே அடங்குடா அப்டீன்னு மனசு சொல்ற சவுண்டு சப் வூஃபர்லே கேக்குது!)

5. இந்தப் படத்தில் "அப்பாடா பாதி கிணறு தாண்டிவிட்டோம்" என்று எந்த தருணத்தில் தோன்றியது?

பாதி கிணறு தாண்டிய உடனே.... (ஹி...ஹி)

(நான் சொல்லல...அருண் 2004லயே தமிழ் ப்ளாக் உலகில் பழம் தின்று மொக்கை போட்டவர்ன்னு :)))) )

6. CTRL C & CTRL V தவிர சாப்ட்வேர் உலகில் கற்றுக்கொண்டது ஏதாவது தற்போது தங்களைய டைரடக்கர் ரோலுக்கு உதவுகிறதா?

கணிப்பொறியில் தமிழ் அடிப்பதில் நல்ல பரிச்சயம் இருப்பதால், முழு திரைக்கதையையும் தமிழிலேயே அடிக்க முடிந்தது. அதனால் திருத்தங்களும் சுலபமாக செய்ய முடிந்தது. அதைத் தவிர, டைரடக்கர் ரோலுக்கு தேவை சாப்ட்வேர் அறிவு அல்ல - கதை சொல்லும் அறிவும், திரைப்படத் தொழில் நுட்ப அறிவும் தான்!

7. அமெரிக்காவிலிருந்து பார்க்கும் போது கோடம்பாக்கம் எப்படி தெரிகிறது?

இன்றைக்கு எத்தனையோ ஹாலிவுட் படங்களையும், வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றாலும்...எங்கள் ஊரில் நான் பார்த்த நடிகர் திலகம் படங்களையும், கமல்ஹாசன் படங்களையும் மறக்க முடியுமா? சினிமா மீதான காதல், இன்று கல்யாணத்தில் முடிந்ததற்கு கோடம்பாக்கம் தானே முன்னுரை எழுதியது! என்னைப் பொறுத்தவரை, மொழிகள் கடந்து, காலம் கடந்து நிற்கும் எந்தவொரு படைப்பும் சிறப்பான விஷயம். அப்படிப்பட்ட சினிமாவானது உலகின் மூலை முடுக்களிலிருந்தெல்லாம் வருகிறது - நமது ஊரிலிருந்தும் எப்போதாவது அத்திப் பூத்தால் போல் வருகிறது. இன்னும் புதுப்புது வித்தியாசமான முயற்சிகள் நிறைய வரவேண்டும். மக்களும், படைப்பாளிகளும் ஒரே அலைவரிசையில் மாற்றம் நோக்கி சிந்தித்தால் தான், கோடம்பாக்கம் கோல்டன்பாக்கமாக மாறும்!

8. ஒரு சக ப்ளாகரிலிருந்து டைரடக்கராக மாறியிருக்கிறீர்கள். படத்தில் இங்கே கதை லொட்டு அங்கே நடிப்பு லொசுக்கு, இரண்டாவது ரீலில் நாலாவது சீனை இப்படி எடுத்திருக்கலாம், க்ளைமாக்ஸில் லைட்டிங் நல்லா இருந்திருக்கலாம் என்று என்னை மாதிரி அரைவேக்காடுகள் ப்ளாகில் மூவி சுப்புடுகளாக விமர்சனம் பண்ணும் போது ஒரு டைரடக்கராக என்ன தோன்றும்?

கஷ்டப்பட்டு தங்கமணி சமைச்சுப் போட்டதை, 'இன்னும் கொஞ்சம் உப்பு ரெண்டு சிட்டிகை அதிகமா போட்டிருக்கலாம்!' என்று நீங்கள் சர்வ சாதாரணமாய் சொல்லும் போது 'சமைச்சுப் பார்த்தா தெரியும்!' என்று அங்கிருந்து டாணென்று பதில் வரும். ஆனால், அதே போல ஒரு பதில் சரவணபவனில் சாப்பிடும் போது வந்தால், பிரச்சினை தான்! காசு கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களுக்கு அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கும். எல்லாவற்றையும் தாமரை இலை தண்ணீர் போல் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம், சினிமா எடுப்பது என்பது ஒரு பிரசவம், போர், வலி! ஒரு நல்ல விமர்சனம் என்பது 'சாண்ட்விச்' முறையில் இருக்க வேண்டும். படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லி, மெதுவாக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி, மீண்டும் நல்ல விஷயத்தோடு முடிப்பதென்பது எந்த ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இதமாய் இருக்கும்.

9. "நானும் ஒரு நாள் படமெடுத்தே தீருவேன்" என்று என்னை மாதிரி மந்திரித்த கோழிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? எங்கே தொடங்குவது?

முதலில் 'திரைப்படம்' என்பது சுலபமான விஷயமில்லை. இதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை, செய்ய வேண்டிய தியாகங்கள் நிறைய. கேம்கார்டரில் நான்கு நண்பர்களை நடிக்க வைத்து, அதை சுமாராக எடிட் செய்து, பின்னணி இசையாக 'ஹௌ டு நேம் இட்'ன் வயலினிசையை ஜம்மென்று போட்டு...'ஆத்தா....நான் படமெடுத்துட்டேன்!' என்று சொல்வதல்ல சினிமா. மேற்கூறியவை ஒரு நல்ல தொடக்கம் என்று வேண்டுமானால் கூறலாம். திரைப்படமெடுக்க ஆசைப்படும் முன் நல்லதாய் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் படிப்பது சாலச்சிறந்தது. திரைக்கதை எழுதுவது சம்பந்தமாக பல புத்தகங்கள் (ஆங்கிலத்தில்) இருக்கின்றன, படமெடுப்பது குறித்தும் பல புத்தகங்கள் கிடைக்கப்பெறும். (தமிழிலும் இது போல புத்தகங்கள் பல வருவது அத்தியாவசியமான ஒன்று - பதிப்பாளர்கள் செய்வார்களென்று நம்புகிறேன்). குறிப்பாக, நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி, ஒரு புரொஃபஷனல் க்ரூவை வைத்து மூன்று குறும்படங்களாவது செய்ய வேண்டும். அது எத்தகைய வரவேற்பைப் பெறுகிறது என்பதும், எத்தனை திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறதென்பதும் உங்கள் திறமைக்கு அளவுகோலாய் இருக்கும். அசிஸ்டெண்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு, சந்து கேப்பில் ஹீரோவிடம் 'கதைப்படி நீங்க பொறுக்கி சார்!' என்று சொல்லி இம்ப்ரெஸ் செய்து தான் 'டைரக்டர்' ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நான் மேலே சொன்ன முறையான பயிற்சியும், குறும்படங்களும் கூட நல்ல இயக்குனராவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும். இந்த முறை நான் சென்னை சென்ற போதே பல கல்லூரிகளில் திரைப்படம் குறித்தான பாடங்கள் வந்து விட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாலுமகேந்திராவில் ஆரம்பித்து ராஜீவ்மேனன் வரை ஒளிப்பதிவு மற்றும் திரைப்படம் குறித்தான கல்லூரிகள் நடத்துகின்றனர், பிரசாத் ஸ்டூடியோ L.V.Prasad Academy என்று ஒன்று நடத்துகிறது - பல அட்டகாசமான மாணவர்களின் அசத்தலான குறும்படங்களை நானும் பார்த்தேன். படிப்பதற்கு வசதியில்லையென்று தோன்றினால், ஒரு இயக்குனரிடத்தில் வேலை செய்து விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்ல முயற்சி தான். குறிப்பாக திரைப்படங்களில் இறங்க ஆசைப்படுபவர்கள், கமலின் இந்தப் பேட்டியைப் பார்க்க வேண்டும் - http://www.youtube.com/watch?v=ZjlD7IEQ3cE
பி.கு :- நான் கமலை இதில் உதாரணம் காட்டியிருப்பதற்கு, 'உன்னால் முடியும் தம்பி' கமலின் தம்பி போல தோற்றமளிக்கும் டுபுக்குக்காகத் தான் என்பதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு, இஞ்சி நூறாகிவிடுமென்று வேதாளம் பயமுறுத்தியதால் தான் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறியக் கடவது. (வேதாளம் a.k.a டுபுக்கு)


(ஹீ ஹீ அருண் ...."உன்னால் முடியும் தம்பி" பட்டம் மக்கள் எனக்கு குடுத்தது....:)))

10. டுபுக்கு அவர்கள் - வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் என்று எனக்கு ஒரு 'சாய்ஸ்' கொடுத்திருக்கிறார். நான் சொல்ல நினைக்கும் 'சில' விஷயங்களை சொல்லி விடுகிறேன்.

திரைப்படங்களைத் திருட்டு வீடியோவில் பார்க்காதீர்கள். திரையரங்கத்திற்குள் நுழையும் போது, செல்போனை ஆஃப் செய்து விட்டு உட்காருங்கள். ஒரு இரண்டரை மணி நேரம் உங்களால் போன் இல்லாமல் இருக்க முடியாதென்றால், திரையரங்கத்திற்கு செல்வதைத் தவிருங்கள். 'மச்சான்...கிளைமாக்ஸ் சீன்லே நம்மாளு பின்றான் இல்லே' என்று ரன்னிங் கமெண்டரி கொடுக்கக் கூடிய இடம் திரையரங்கம் கிடையாது என்பது ஒரு கொசுறு செய்தி. நல்ல திரைப்படங்களைத் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிப்பதன் மூலம், நீங்களும் மாற்றத்தில் பங்குபெறுகிறீர்களென்பதை மகிழ்ச்சியோடு உணருங்கள். கடைசியாக, 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' படத்தைக் குறித்து நண்பர்களிடத்தில் என் சார்பாக ஒரு 'ஹாய்' சொல்லி நூறு பேருக்காவது இமெயிலின் மூலம் இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களுக்குத் தலைமுடி அரக்கு நிறத்தில் மாறி, காது சிகப்பு நிறமாகி விடும் அபாயமிருக்கிறது. ஒரு வேளை அனுப்பி விட்டீர்களென்றால், உங்களுக்கு 'நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை விட்டுச் சென்ற ராஜாவின் மகனிடமிருந்து' ஸ்பாம் மெயில் வருவது நின்று விடும்!

---------

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் கடைசி நேர வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி என்னையும் ஒரு ஆளா மதித்து பேட்டி கொடுத்தமைக்கு கோடானு கோடி நன்றி அருண். அச்சமுண்டு அச்சமுண்டு படம் மிகப் பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி அருண். சுடச் சுட..படங்களுடன் தனது ப்ளாகில் அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார் இது போக அவரின் தளத்திலும் இவரின் முந்தைய குறும்படங்களை தரவிறக்கம்( அதான்பா தமிழ்ல சொன்னா டவுண்லோட்) செய்து கொள்ளலாம்.

இது போக அருணிடம் ஸ்னேகா கொஞ்சம் இளைத்த மாதிரி இருக்கே நம்ம வாசகர்களும் அதை சரி பார்க்க....கண்ணுல ஒத்திக்கிற மாதிரி exclusive சினேகா படம் இருந்தா அனுபுங்கன்னு சொன்னேன் அருண் அதைக் கண்டுக்காமல் சாய்ஸில் விட்டதோடு அல்லாமல் டுவாக்கியெல்லாம் இருக்கிற படத்தை காட்டி மிரட்டுகிறார். (Btwn- அந்த படத்தில் ஜானோடு இருப்பது தான் அருண்) . இதுகெல்லாம் அடங்குகிற பார்ட்டியா நாம...அருணிடமிருந்த நன்றி உணர்ச்சியோட நேர போய் சினேகா இருக்கிற மாதிரி ஒரு படத்தை அவரோட வெப்சைட்லேர்ந்து சுட்டு கீழே போட்டுள்ளேன்.. :))) இதுக்கும் ரொம்ப நன்றி அருண். படத்தைப் பார்த்துவிட்டு நீங்களும் போய் ஒரு வார்த்தை பாராட்டுங்கள் நண்பர் சந்தோஷப்படுவார்.









Monday, November 24, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.5

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4

பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.

அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.

"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.

பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.

இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.

இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.

அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.

அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.

விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.

"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.

நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.

அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.

"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.

"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.

நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.

கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.

அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.

Monday, November 10, 2008

அம்மமா சினிமா

மிகவும் பிடித்த ஒரு டாப்பிக்கில் தொடர் விளையாட்டிற்கு அழைத்த மகேஷ்க்கும், கைப்பிள்ளைக்கும் மிக்க நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சும்மாவே கொசுவத்தி சுத்தறதுக்கு கேக்கவேண்டாம்..இதுல இந்த மாதிரி வேற கேட்டா?...நினைவு தெரிந்து பார்த்த முதல் சினிமா எனபதை விட நினைவு தெரிந்து மனதில் பதிந்த ஒரு சினிமா பற்றிய உண்மை சம்பவம். ரொம்ப சின்ன வயது என்பதால் தனியாக சென்று தியேட்டரில் சினிமா பார்ப்பதற்கு பெர்மிட் கிடைக்காத மூக்கை ஒழுகிக் கொண்டு டவுசரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த காலம் அது. ராஜா ராணி, உம்மாச்சி(சாமி) படங்கள் என்றால் உயிர். எங்க ஊர் கல்யாணி தியேட்டரில் வெற்றி விநாயகர் (அல்லது விநாயகர் துணையா என்று சரியாக நியாபகமில்லை) படம் போட்டிருந்தாரகள். பக்கத்து ஊரில் சொந்தக்கார வீட்டில் விசேஷம். குடும்பத்தோடு எல்லோரும் போயிருந்தோம். மாமா பையன் ஒருவன் என்னை விட மூன்று நாலு வயது பெரியவன், ஆனால் தனியாக தியேட்டர் போவதற்க்கு பெர்மிட் வைத்திருந்தான். என்னையும் அவன் தம்பியையும் இழுத்துக் கொண்டு, திரும்ப எங்க ஊருக்கு வந்து படத்துக்கு போய்விட்டோம். முக்கால் வாசி தரை அல்லது பெஞ்ச் டிக்கெட்டுக்குத் தான் காசு இருக்கும். அன்றைக்கு தரை டிக்கெட்டில் தெலுங்கு டப்பிங்கில் விநாயகர் தரிசனம். விநாயகர் வீட்டில் கோவித்துக் கொண்டு காட்டிற்கு தவம் பண்ண போகிறார். அப்போது வழக்கம் போல் ஜெயமாலினி விநாயகர் இருக்கிறாரே என்று வெட்கமே இல்லாமல் சிறு துணியை அணிந்து கொண்டு, கையில் ஒரு ஆப்பிளையும் வைத்துக் கொண்டு ஆடுகிறார். சரி இதோ டேன்ஸை முடித்துவிடுவார் என்று பார்த்தால் ஜெயமாலினி ஆப்பிளை கன்னம், மற்றும் இன்ன பிற இடங்களில் வைத்துக் கொண்டு சிம்பாலிக் ஆனந்த நடனம் புரிகிறார். வேறு வழியில்லாமல் அப்புறம் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டைக் கண்ணால் பாட்டு முடிந்துவிட்டதா என்று பார்த்தேன். விநாயகரும் என்னை மாதிரி கண்ணை மூடிக்கொண்டு பாவ்லா காடிக்கொண்டிருந்திருப்பார் போலும், பாட்டு முடிய கொஞ்ச நேரமாகிற்று. படம் முடிந்து மாமா பையன் வீட்டுக்கு போனால் அங்கே விசேஷ வீட்டில் எல்லாரும் எங்களை தேடிக்கொண்டிருந்ததாகவும், பதறிப் போனதாகவும் பயங்கர டோஸ். அப்புறம் எங்க வீட்டுக்கு வந்தால் இங்கேயும் பயங்கர டோஸ். என்னுடைய இரண்டாவது அக்கா வேறு பனிஷ்மெண்டாக பாட புஸ்தகத்தை எடுத்து வரச் சொல்லி விதி பட சுஜாதா மாதிரி ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு பெண்டை நிமிர்த்திவிட்டார். அப்புறம் கடைசியில் போனது விநாயகர் படம் என்றவுடன் அக்காவிற்கு பயம் வந்துவிட்டது. அக்கா பயங்கர விநாயகர் பக்தை. ஷாம்பூ வாங்குவதிலிருந்து டீச்சர் வரவில்லை என்பது வரை விநாயகர் மேல் சத்தியம் பண்ணினால் தான் ஒத்துக் கொள்வார். விநாயகர் மேல் அவ்வளவு லவ்ஸ். அப்புறம் அவர் விநாயகருக்கு நமஸ்காரம் செய்து ஆன்டி க்ளைமாக்ஸாகிப் போனது. சே இத முதலிலேயே சொல்லியிருந்தால் அவ்வளவு சேதாரமாகிப் போயிருக்காதே என்று இன்றுவரை அடிக்கடி எனக்குள் சிரித்துக்கொள்வேன். அதோடு ஜெயமாலினி ரஜினி லகலகலகலகலகன்னு சொல்லுகிற மாதிரி உடம்பெல்லாம் குலுங்க ஒரு ஸ்டெப் போடுவார் பாருங்கள் நரசிம்மராஜுலுவின் எல்லா படத்திலும் பார்க்கலாம்.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

23ம் புலிகேசி. இந்தியா சென்றிருந்த போது என்னுடைய மகள்களுக்கு அங்குள்ள தியேட்டரை காட்ட கூட்டி போயிருந்தேன். அந்த முறை சென்னை செல்லவில்லையாதலால் அம்பையில் தியேட்டருக்கு போயிருந்தோம். வெற்றிகரமான நூறாவது நாள் என்று போஸ்டர் அடித்துவிட்டார்களே என்று அந்த தீயேட்டரில் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். மொத்தம் பதினைந்து பேர்கள் எங்களையும் சேர்த்து. உட்கார்ந்த இடத்தில் ஃபேன் போடவில்லையாதலால் ஃபேனை தேடி தேடி உட்காரவேண்டியிருந்தது. அப்பவும் புலிகேசி வரும் போது மஞ்சள், சிவப்பு பல்பெல்லாம் எரிய விட்டு ஸ்பெஷல் எபெஃக்ட் காட்டி மெருகேற்றிக்கொண்டிருந்தார்கள். எக்ஸ்ட்ரா ஸ்பீகரில் காது ஜவ்வு தான் கிழிந்துவிட்டது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

எங்க விட்டு தியேட்டரில் வாரத்துக்கு எப்படியும் ஐந்து அல்லது ஆறு படம் கண்டிப்பாக ஓடும். அவ்வளவு சினிமா பைத்தியம் நான். பெயர் சொல்லாமல் - சமீபத்தில் வந்த ஒரு மூன்று நாலு படம் பார்த்தேன் ஆனால் இவற்றில் இரன்டு படங்களில் பாதியிலேயே தூங்கிவிட்டேன். எப்பேற்பட்ட அரதப் படத்தையும் உட்கார்ந்து பார்க்கும் நான் தூங்கியது தங்கமணிக்கு பயங்கர ஷாக். ஸ்க்ரிப்ட்டும் ஸ்ட்ராங்காக இல்லாமல் கதையும் வலுவாக இல்லாமல் எப்படி இவ்வளவு பைசாவை போட்டு படமெடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. 'இது....படம்' ன்னு சொல்ல வைக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ்படம் வந்து கொஞ்ச நாட்களாகிறது. ஜெயம்கொண்டான், ராமன் தேடிய சீதை நல்ல படங்கள் தான் ஆனால் அதுவும் இந்த ரகம் கிடையாது. "பொய் சொல்லப் போறோம்" ஆர்வத்தோடு பார்க்கக் காத்திருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய இருக்கிறது. ஐம்பது பைசாவுக்கு பெஞ்ச் டிக்கெட், இருபத்தியைந்து பைசாவுக்கு பெரிய மைசூர்பாகு என்று 75 பைசா பட்ஜெட்டில் நானும் ஒரு நண்பனும் பார்த்த கிருஷ்ணா தியேட்டர் ராஜா ராணி/ உம்மாச்சி படங்கள் மிகவும் தாக்கியிருக்கின்றன.

இது தவிர உன்னால் முடியும் தம்பி, சலங்கை ஒலி, அன்பே சிவம், மகாநதி, குருதிப்புனல். கமல் ரசிகனாயிருப்பதால் இந்த படங்களை சொல்லவில்லை. இந்த படங்களுக்கப்புறம் தான் கமல் ரசிகனானேன் இந்த படங்களைப் பார்த்த பிறகு ரசிகனாயிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் இதில் கமலின் குருதிப்புனல் தயாரிப்பு தைரியத்தைப் பார்த்து ரொம்ப மலைத்திருக்கிறேன். ஆடியோவிலேயே பல லட்சங்களை தமிழ் சினிமா பார்க்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் கமல், அர்ஜுன் மாதிரி பெரிய பெயர்களை வைத்துக்கொண்டு பாட்டே இல்லாமல் ஒரு முழு நீள ஆக்க்ஷன் படங்களை பண்ணுவதற்கு தில் வேண்டும். படத்தின் ட்ரைலர் பார்த்த நாள் முதாலாகவே படம் எப்போ வரப்போகிறது என்று ரொம்ப காத்திருந்தேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஆனால் அதற்கப்புறம் ஆக்க்ஷன் படமென்றால் கூட்டத்தோடும் தத்துவத்தோடும் ஒப்பனிங்க் சாங், பஞ்ச் டயலாக், க்ளைமாக்ஸ் பைட், நடுவில் ரெண்டு ஐயிட்டம் சாங் என்று தமிழ் சினிமா பழைய பார்முலாவுக்கே போய்விட்டது வருத்ததை அளிக்கிறது.

தாக்கிய வரிசையில் ரோஜாவிற்க்கு ஒரு முக்கிய இடம் உண்டு.(இந்த படத்தை பற்றி வேறொரு கேள்வியில்) பழைய படங்களில் நிறைய படங்கள் தாக்கியிருக்கின்றன. காதலிக்க நேரமில்லை மறக்க முடியாத ஒன்று.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சுயநலத்தனாமாக இருந்தாலும் உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால் அன்றாட தமிழ் சினிமா அரசியல் எதுவும் என்னை பாதிக்காமல், என் வயிற்றிலடிக்காமல் இருப்பதால் என்னை எதுவுமே தாக்கவில்லை. இவற்றையும் செய்தியாக பார்த்திருகிறேனே தவிர ரொம்ப ஃபீல் ஆனது ஒரே ஒரு விஷயத்தில் தான். இந்தத் துறையில் காலூன்றி பெயர் வாங்குவ்து கஷ்டம் அதுவரை என்னதான் சூப்பராய் வேலை செய்தாலும் அது வேறொருவர் பெயரில் தான் அவரும் என்று கேட்டது ரொம்ப பாதித்தது. உறவினர் ஒருவர் மிக நன்றாக புகைப்படம் பிடிப்பார். சினிமா துறையில் ஒரு படத்தில் அவர் தான் ஸ்டில்ஸ் எடுத்ததாகவும் ஆனால் வேறொருவர் பெயரில் தான் படம் ரிலீஸானது என்று கேள்விப்பட்ட போது அதை ஜீரணிக்க முடியவில்லை. ஸ்டில்ஸே இந்த நிலையென்றால் அசிஸ்டண்ட் டைரக்ட்டர்களின் நிலை ஹூம்ம்ம்ம்ம்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

சம்பவம் என்றால் சீரோ என்பதால், சம்பவம் என்பதை விஷயம் என்று மாற்றிக்கொள்கிறேன். உடனே நியாபகத்துக்கு வருவது காதலுக்கு மரியாதை க்ளைமாக்ஸ். ஒரு அழுத்தமான திரைக்கதை. ஃபாசிலின் மேல் எனக்கு மிகப் பெரிய மரியாதையை உண்டுபண்ணிய படம். இதை பல முறை பார்த்து நிறைய பாடங்கள் கற்று இருக்கிறேன். அதே போல் இந்த மாதிரி ஒரு காட்சிக்கு எப்படி பிண்ணனி இசை அமைப்பது என்று இளையராஜ ஒரு விரிவாக்கப் பாடமே எடுத்திருப்பார். அற்புதமான காம்பினேஷன்.

அதே போல் ரோஜா. மணிரத்னத்தின் திரைக்கதையமைப்பு இந்த படத்தில் சொல்லி மாளாது. பார்ப்பவரின் மனநிலையை கரெக்ட்டாய் திரைக்கதையில் எக்ஸ்ப்ளாயிட் பண்ணியிருப்பார். இந்த படத்தின் பிண்ணனி இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு புது ட்ரென்ட் செட்டராய் அறிமுகமான ஏ.ஆர்.ஆரின் ரிச்னஸ் இன்றும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும். தீவிரவாதிகளின் தீவிரதத்தை இசையில் அப்படியே கொண்டுவந்திருப்பார். சவுண்ட் இன்சினியரிங் என்ற வார்த்தையை ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். மணிரத்தினம், ஏ.ஆர்.ஆர் காம்பினேஷனில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு படம் திருடா திருடா. இந்தப் படத்தின் "ராசாத்தி என் உசிரு என்னுதில்லை" என்னுடைய ஆல் டைம் பேவரிட்.

சமிபத்தில் வந்த தாம் தூம் பட சவுண்ட் இஞ்சினியரிங் சூப்பராய் இருக்கிறது. வீட்டில் ஹோம் தியேட்டர் இருந்தால் இந்த படத்தின் ஐங்கரன் ஒரிஜினல் டி.வி.டியை போட்டு பாருங்கள் நான் சொல்வது புரியும். டோல்பி 5.1 மிக்ஸிங்க ரசித்து பண்ணியிருக்கிறார்கள்.

இவை தவிர நிறைய தமிழ் படங்களில் தொழில்நுட்பம் பிடித்திருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலும் அந்த படங்கள் கமெர்ஷியல் வெற்றி பெறாததால் இந்த தொழில்நுட்பங்கள் உரிய கவனத்தைப் பெறாமல் போயிருக்கின்றன. உதாரணமாக ஓரம்போ படத்தின் எடிட்டிங் மற்றும் வசனம். எனக்கு மிக பிடித்தது. படமே ஒரு வித்தியாசமான லைட் ஹார்ட்டெட் களம். பாலுமகேந்திராவின் காமிரா கோணங்கள், பி.சி.ஸ்ரீராமின் லைட்டிங், தோட்ட தரணி மற்றும் சாபு சிரிலின் கலை சொல்லிக்கொண்டே போகலாம்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போ இரண்டு வருடமாய் ரொம்ப இல்லை. வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி. முக்கியமான விஷயங்களை எல்லாம் கரெக்ட்டாய் சொல்லிவிடுவார். முன்னாடி லிங்க் எல்லாம் எடுத்துவைப்பார். சினிமா வண்டு, நண்டு, தவளை என்று எங்கிருந்தெல்லாமோ நாலெட்ஜ் டெவெலப் பண்ணுவார். எனக்கு இந்த விஷயங்களை விட அதோடு வரும் படங்களை எங்கிருந்து விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் கரெக்ட்டாய் எப்படி பிடிக்கிறார்கள் என்று தான் புத்தி போகும். அப்புறம் நான் படிக்கிற மாதிரி அதிலிருக்கும் படங்களை மட்டும் தான் பார்க்கிறேன் என்று இப்போ எங்கே படித்தார் என்பதைக்கூட சொல்ல மாட்டேங்கிறார். மிஸ்டர் மியாவ், லைட்ஸ் ஆன்....ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அட நீங்க வேற ஏங்க என் வாயக் கிளறிக்கிட்டு...


7. தமிழ்ச்சினிமா இசை?

உலகத் தரத்திற்க்கு கொஞ்சமும் சளைத்ததில்லை. பின்னிப் பெடலெடுக்கிறார்கள். தமிழ் சினிமா பெருமைப் படும் லெவலில் தான் இருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஓ நிறைய. கலைப் படங்கள் என்பதைவிட மற்ற மொழிகளில் பாப்புலர் தான் நிறைய பார்த்திருக்கிறேன். தெலுங்கு படம் பார்க்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பொம்மரில்லு. அந்த படத்தின் ஒரு பாட்டை பார்த்துவிட்டு படத்தைப் பற்றி என்ன ஏதென்று தெரியாமல் வாங்கிப் பார்த்தேன். ஜனரஞ்சகமாக ஒரு விஷயத்தை எப்படி சொல்வதென்று பாடம் நடத்தியிருந்தார் இயக்குனர். அதே போல் மலையாளத்தில் தன்மாத்ரா. சமீபத்தில் வெட்னஸ்டே இந்திப் படம் பார்த்தேன். இரவு பதினொன்றரைக்கு ஆரம்பித்து ஒன்றரை வாக்கில் முடித்தோம். சமீபத்தில் என்னை மிக தாக்கிய படமாகிவிட்டது. படம் பார்த்துவிட்டு ஒரு அரைமணிநேரம் வெத்து ஸ்கிரீனையே பார்த்துக்கொண்டிருந்தேன். படத்தை கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். ஒரு இரண்டு மணி நேரம் கட்டிப்போட்டுவிடுவார் இயக்குனர். பாட்டு கிடையாது, சினிமாவுக்கே உண்டான பிலடப் கிடையாது, எந்த விஷயத்தையும் சுத்தி தொடுவதெல்லாம் கிடையாது. படம் விறு விறு விறுவென போய் முடியும் போது தான் உங்களுக்கே சுயநினைவு வரும் அவ்வளவு ஒன்றிப் போய்விடுவீர்கள். வெரி ஹைலி ரெக்கமெண்டட். ஆங்கில படங்களில் நிறைய. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் டாப்பில் இருக்கிறது. இந்த படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். 'தி வில்லேஜ்', 'லைப் இஸ் பியூடிபுல்' இன்னும் நிறைய இருக்கிறது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஹீ ஹீ நேரடி தொடர்பு கான்ட்ரிப்யூஷன் என்ற ரீதியில் இதுவரை இல்லை. சில பேரை தெரியும் என்ற வரையில் தான். ஆனால் ஒரு நாள் நான் ஒரு தமிழ் படம் கண்டிப்பாக இயக்குவேன். அது மேம்பட உதவுமா என்றெல்லாம் காலமும் மக்களும் தான் சொல்லவேண்டும். இந்த ரிஸ்க் எடுக்கத் தயங்கும் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் போன வருடமே போங்கடா நீங்களும் உங்க வேலையும்ன்னு தூக்கி எறிந்துவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்திருப்பேன்...பார்ப்போம்.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லாவே இருக்குன்னு நினைக்கிறேன். திறமைக்கு குறைச்சலே இல்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த சமாச்சாரங்கள் செய்திகள் பத்திரிகைகள்...etc இதையெல்லாம் விட்டுவிடுங்கள், சினிமா கிடையாது என்றால் வாரத்துக்கு ஆறு படம் பார்க்கும் என்னை மாதிரி அடிக்டுக்கு என்ன அகும்...? கை காலெல்லாம் விலுக்கு விலுக்குன்னு இஸ்துக்கும்.


இச்சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் ஐவர்.

வழக்கம் போல இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் தான். யாரெல்லாம் இதுவரை இந்த தலைப்பில் எழுதலையோ அவர்கள் எல்லாரையும் அழைக்கிறேன். எனக்குப் பிடித்த இந்த தொடரில் மற்றவர்களின் கருத்துக்களையும் ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருக்கிறேன் ஆகவே இதுவரை எழுதவில்லை என்றால் எழுதுங்கள். நன்றி.

Wednesday, October 29, 2008

குடிகாரன் ...

பேச்சா தான் எடுத்துப்பீங்க தெரியும் இருந்தாலும் சொல்லீக்கிறேன்...அடுத்த வாரத்திலேர்ந்து கண்டிப்பா பதிவு போட ஆரம்பிச்சிருவேங்க சாமியோவ்...அதுவரீக்கும் லீவு மார்க் பண்ணிக்கோங்கப்பூ.

எல்லோருக்கும் பிலேட்டட் தீபாவளி நல்வாழ்த்துகள் (துரை சோக்கா கண்டுபிடிச்சிருக்கான்யா பிலேட்டட் வார்த்தையை...தமிழ்ல லேட்டா வாழ்த்துசொல்ற பழக்கத்தை அனுமதிச்சிருக்காங்களா?)

Saturday, September 27, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.4

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3

மினி ப்ராஜெக்டை சொத்து பிரித்ததில் அது மைக்ரோ மினியாகிவிட்டது. எங்க ஊரில் மளிகைக் கடை அண்ணாச்சி காதில் சொருகியிருக்கும் பென்சிலை எடுக்காமலேயே போடும் கணக்கை கம்ப்யூட்டர் படுத்தச் சொல்லியிருந்தார்கள். மளிகைக் கடை பெயரை மட்டும் "ஏடிபி கார்ப்பரேஷன்"ன்னு பந்தா படுத்தியிருந்தார்கள். "என்னா பாஸூ இப்படி சொதப்பறாங்க...இப்படியே மளிகைக் கடை கணக்கெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா எப்போ தான் சின்ன வயசு குஷ்பூ போட்டாவ குடுத்து கண்டுபிடிக்கச் சொல்லுவாங்க" என்பதே அம்மாபட்டியின் கவலையாக இருந்தது. அதெல்லாம் பைனல் இயர்ல தான்ன்னு அவனைப் பேக்கப் செய்துவிட்டு கிளியோடு ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்தேன். விண்டோஸ் 3.0 அப்போது தான் (என்)ஐ.ஐ.டிக்கு வந்திருந்த காலமது. டாஸ் - பாக்ஸ்ப்ரோவில் தான் இந்த ப்ராஜெக்ட் செய்யவேண்டும் என்று வாத்தியார் சொல்லியிருந்தார்.

ஓப்பனிங் ஸ்கீனில் கம்பெனி பெயரை எங்கே போடலாம், எந்த டிசைனில் எந்த ஃபாண்ட்டில் போடலாம் என்று ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான மிக முக்கியாமான விஷயங்களில் நான் தீவிரமாக செலுத்தி வந்தேன். கிளியோ கணக்குக்குத் தேவையான அல்காரிதமை தான் முதலில் பார்க்கனும்ன்னு அல்பமான விஷயங்களில் கவனத்தை சிதறவிட்டுக்கொண்டிருந்தது. சரி சரி அதெல்லாம் இடது கையால அசால்ட்டா செய்வோம்லன்னு உதார் விட்டு கம்ப்யூட்டர் ட்ரோமுக்கு போய் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து வேலையை ஆரம்பித்தால் ஆரம்பமே சவாலாக இருந்தது. கிறுக்குப் பயலுங்க ட்ரோமில் வேறெதோ மேக் கீபோர்ட் வைத்திருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு கிலி பிடித்து இங்கே ஐ.ஐ.டியில் செய்த கீ போர்ட் எக்ஸர்சைலாம் மறந்து போய் "ஏ" எங்க இருக்கும் "கே" எங்க இருக்கும்ன்னு உதற ஆரம்பித்து விட்டது. அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாளாம்ன்னு ஜம்பமாக கீபோர்ட்டை வேறு என் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் மோவாக்கட்டையில் கையை வைத்துக் கொண்டு யோசிக்கிற மாதிரி கிழக்கே ஒரு தரம் பார்த்து மேற்கே ஒருதரம் பார்த்து அப்புறம் கீழே கீப்போர்ட்டை உத்துப் பார்த்து கண்ணால் துளாவி "கே" கண்ணில் தட்டுப்பட்டவுடன் "ஆங்...கரெக்ட் அதான் சரி...இந்த அல்காரிதம் லாஜிக் தான் யோசிச்கிட்டு இருந்தேன்...இப்போ எப்படி பண்ணனும்ன்னு ஒரு ஐடியா கிடைச்சாச்சு"ன்னு சமாளித்து அப்புறம் திங்க்கிங் ப்ராசஸ் தடை படுகிறதென்று கீபோர்ட்டை கிளியிடம் மாற்றிவிட்டேன்.

வேலையை முடித்துவிட்டு டெய்லி ட்ரோமில் மத்த பையன்களெல்லாம் யுவதிகளோடு உலக நன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள், வடநாட்டு கிளி மட்டும் வேலை இருக்கிறதென்று சந்தைக்கு கிளம்பிவிடும். அது சரி நமக்கு இந்தியாவிலேயே முதல் மாணவனாய் வருகிற யோகம் மட்டும் தான் இருக்கு போலவென்று மனதை தேற்றிக் கொண்டு 11இ க்கு நானும் 47டிக்கு அம்மாபட்டியும் தேவுடு காக்க ஆரம்பித்துவிடுவோம். "ஏன் பாஸு நமக்கு மட்டும் செட்டு செட்டாக மாட்டேங்குதுன்னு"ன்னு அம்மாபட்டி 47டி வரும் வரை செட்டு கவலைப் படுவான்.


நான் படித்து வந்த நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் இருக்கும் எங்கள் ஐ.ஐ.டி தலமை அலுவலகம் மிக கலர்புல்லான இடம். எனக்கும் அம்மாபட்டிக்கும், ரெமோ பைக்கில் ஸ்டையிலாக சாய்ந்து கொண்டு நிறைய பாடம் எடுத்திருக்கிறான். குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு பின்னாளில் ஹீரோயினான ஷாலினியும் அங்கு தான் படித்தார். அப்போது அவர் ஹீரோயினாகவில்லையாதலால் யாரும் ரொம்ப கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கும் அம்மாபட்டிக்கும் ஷாலினியை பார்த்து அவர் நடிப்பைப் பற்றி ரெண்டு வார்த்தை பெருமையாக பேசவேண்டும் என்று கொள்ளை ஆசை. ரெமோ அதற்க்கு தடை போட்டுவிட்டான். "சுத்த காட்டான்களா இருக்கதீங்கடா ரொம்ப ஓவரா ஊத்தினீங்கன்னா யாருமே திரும்பக் கூட பார்க்க மாட்டாங்க"ன்னு ரெமோ சொன்னது அம்மாபட்டிக்கு சமாதானம் ஆகவில்லை. "அதெல்லாம் இல்ல பாஸு அந்தப் புள்ள நம்ம செட்டுல சேர்ந்திருமோன்னு இவனுக்கு பயம்"ன்னு அம்மாபட்டியின் நம்பிக்கை சில நேரங்களில் எனக்கு தலையே சுற்றும்.

நுங்கம்பாக்கம் ஹை ரோடு ஐ.ஐ.டி மூன்று மாடிக் கட்டிடம். நாலாவது மாடி டெரஸில் ரூப் கார்டன் மாதிரி செடியெல்லாம் வைத்து பெஞ்ச் டேபிளெல்லாம் மாணவர்கள் படிக்கட்டும் என்று போட்டிருப்பார்கள். ஆனால் மாணவர்கள் படிக்காமல் மானாவாரியாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பார்கள். எல்லா செட்டும் கலர்புல்லாக இருக்கும். ரெமோ வந்து எங்கள் செட்டில் ஐய்க்கியமாவதற்கு முன்னால் நானும் அம்மாபட்டியும் மட்டும் வெத்தாக "பாஸ் பாஸ்"ன்னு கொஞ்சிக்கொண்டிருப்போம். ரெமோ எங்க செட்டில் ஐய்க்கியமாகி அவனோடு நாலு நண்பிகளை கூட்டிக் கொண்டு வந்ததுக்கப்புறம் தான் நானும் அம்மாபட்டியும் "ஏ...எல்லரும் பார்த்துக்கோங்க நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடி..நாங்களும் ரவுடின்னு" சவுண்டு விட ஆரம்பித்தோம்,

ஆனால் அம்மாபட்டி என்னை விட கில்லாடியாக இருந்தான். ரொம்பவே தேறி கம்ப்யூட்டர் ட்ரொமில் பட்டயைக் கிளப்ப ஆரம்பித்தான். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட மேகசினெல்லாம் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டரின் எதிர்காலமெல்லாம் கிளி ஜோஸ்யம் சொல்லுவது மாதிரி சுத்தி நாலு யுவதிகளை வைத்துக் கொண்டு கதை சொல்லுவான். அவன் கூட ப்ராஜெக்ட் பண்ணிக்கொண்டிருத ரெமோவின் நண்பி அம்மாபட்டியுடன் சிரித்து சிரித்து பேசும். எனக்கு வெளியே ஆல் இந்தியா லட்சியம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தாலும் உள்ளே அம்மாபட்டியே கலக்குறானேன்னு புகையும். "பாஸு பார்த்தீங்கள்ல...வடநாட்டு கிளி கூட உங்க செட்டா இருந்தாலும் கண்ணு இங்க தான் என்னை சுத்தி நோட்ட்ம் விடுதுன்னு" அடிக்கடி என்னையும் அலெர்ட்டாக்குவான். போகிற போக்கைப் பார்த்தால் இவன் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாய் ரெமோவுக்கே டிப்ஸ் குடுப்பான் என்று ரெமோ அவனுக்கு டிப்ஸ் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.

ஒரு நாள் கிளி முன்னதாகவே முடித்து விட்டு வெளியில் புதிதாய் யாரோ- வுடன் நின்று பேசிக்கொண்டிருந்தது. நான் வழக்கம் போல மத்த பேக்கப் பார்மலிட்டியை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தால் "மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். அம்மாபட்டி சிவாஜி பாதி ஜே.கே ரித்தீஸ் மீதின்னு என்னல்லாமோ ஃபீலிங்க்ஸ் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.

ரெமோ பல்லவர் காலத்து மஹாபலிபுர சிலையாய் உறைந்துவிட்டான். அந்தாளை எங்கேயோ பார்த்த மாதிரி எனக்கு இருக்க கேட்டேவிட்டேன். அபிஜித் நல்ல மாதிரி பட் படென்று விஷ்யத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் செலக்க்க்ஷனாகி ட்ரெயினிங்கில் இருப்பதாகவும், நான் இருந்த அதே கே.கே.நகரில் இரண்டு தெரு தள்ளி தான் அவர் அப்பா இருப்பதையும் சொன்னார். அவர் அப்பா ரிட்டையர்ட் போலீஸ் சென்னை எஸ்.பீ. நல்ல வெள்ளியில் பூண் போட்ட ஒரு தடியுடன் நல்ல கொளு கொளு நாயைக் கூட்டிக் கொண்டு டெய்லி வாக்கிங் போவார். நானும் பார்த்திருக்கேன் நல்ல மனிதர் என்று அபிஜித்திடம் சொல்லி எதற்க்கும் ஒரு சேப்டிக்கு இருக்கட்டும்ன்னு ஆல் இந்தியா முதல் மாணவன் மாமாவின் லட்சியத்தையும் அவர் காதில் போட்டுவைத்தேன்.

அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் அந்த மைக்ரோ பிராஜெட்டை ஒரு வழியாக முடித்தோம். கிளி மேடம் கரெக்ட்டாய் வருவார், சில நாட்களில் மேடமிற்க்கு வேலை இருக்கும். நான் இன்ன இன்ன செய்திருக்கிறேன் என்று சொன்னால் சரி பார்ப்பார்...ப்ரோக்கிராமில் அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு மிச்சத்தை என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்புவார். அம்மாபட்டி அபிஜித் சாரிடம் ரொம்ப கேட்டதாகச் சொல்லச் சொலுவான், மேடமும் வாஞ்சையாக எங்களைப் பார்த்து சிரிப்பார். "பார்த்தீங்களா பாஸு...மேடமுக்கு நம்ம மேல எப்பவும் ஒரு தனி நட்பு"ன்னு அம்மாபட்டி ஃபீலிங்ஸ் காட்டுவான். நானும் ஆமாம்ன்னு மண்டையை ஆட்டுவேன். ரெமோ வழக்கம் போல தலையிலடித்துக் கொள்வான்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Monday, September 01, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.3

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2

'ஹேவ் எ ஹாப்பி பீரியட்" என்று மாதவிடாய்க்கு டீ.வி அட்வர்ட்டைசன்மென்ட்டில் பெண்கள் வாழ்த்துச் சொல்லிக்குமளவு முன்னேறாத ஒரு கால கட்டத்தில் நான் சென்னையில் கம்ப்யூட்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தேன். சிஸ்டம்ஸ் ஆர்க்கிடெச்சர் அன்ட் மேனேஜ்மென்ட் என்று கொஞ்சம் கவுரதையாக இருக்கும் ஒரு வாக்கியத்தைப் பிடித்துக் கொண்டு, எங்கே படிக்கிறீங்க தம்பி கேள்விக்கு, நௌன்னை பலவிதமாக கூறலாம் என்ற பாலபாடத்தில், ஐ.ஐ.டி என்று என்.ஐ.ஐ.டியில் 'என்'னை சைலண்டாக்கிவிடுவேன்.

அம்பாசமுத்திரம் சிட்டியில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை மாதிரியான கிராமப்புற கலாச்சாரம் கொஞ்சம் புதிது. சென்னையின் தலமை அலுவலகத்தில் மூன்று மாடிக் கட்டிடத்தில் நுனி நாக்க்கு இங்லிபீஸில் புடவையை இப்படியும் கட்டலாம் என்று அறியவைத்த கவுன்சிலர், உன்னை மாதிரி அறிவாளியைப் பார்த்ததில்லை என்று அம்பத்தியையாயிரம் ரூபாயை பொங்கல் வைத்துவிட்டார். பீஸ் கட்டும் போதே தெரிந்துவிட்டது, புடவையை முன் ஆபிஸில் இருக்கும் கவுன்சிலர்கள் மட்டும் தான் கட்டுவார்கள் என்று.

பெண்களுக்கு எப்படியோ தெரியாது, ஆண்களுக்கு வாழ்வில் குறைந்தது மூன்று தருணங்களில் வாழ்க்கையைப் பற்றிய கவலை வரும். ப்ள்ஸ் டூ ரிசல்ட் வருவதற்கு முந்தைய நாள், காலேஜ் பேர்வல் பார்ட்டி முடிந்த அடுத்த நாள் இரவு, முதல் இன்டர்வியூ ஊத்திக் கொண்ட மாலை. எனக்கு மனைவி ரெடி பாண்டியராஜன் மாதிரி காலேஜ் முடித்த காலக்கட்டத்தில் கல்யாணம் வேறு தோராயமாக நிச்சயமாகி விட்டிருந்தது என்பதால் கவலை கிறித்துமஸ், நியூ இயர் பொங்கல் சேல் மாதிரி எக்ஸ்டெண்ட் ஆகிவிட்டது. நிச்சயமானதில் அடியேன் கைங்கர்யம் நிறைய இருந்தாலும், அம்பத்தியையாயிரம் பீஸுக்கு மாமா வேறு என்னம்மோ ரேடியோவில் நியூஸ் வாசிக்கிற மாதிரி "ஆல் இண்டியாவிலேயே" முதல் மாணவனாய் வரனும்ன்னு கண்டிஷன் போட்டிருந்தார்.

முதல் நாள் க்ளாசுக்கு போனால் கே.டி.குஞ்சுமோன் செட்டுக்குள் நுழைந்தது மாதிரி இருந்தது. வெள்ளக்கார துரையோடு பேத்திகளும் பேரன்களும் ஏகத்துக்கு நுனிநாக்கில் படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொட்டாம்பட்டி ரயிலு எத்தனை மணிக்கு வரும்ன்னு கேட்டுவிட்டு ஓரமாய் உட்கார்ந்துகொண்டேன். திக்குத் தெரியாத காட்டில் தொலைந்துகொண்டிருந்த போது அம்மாபட்டிக்கு அட்ரெஸ் கேட்டுவிட்டு இன்னொரு சக 'சிட்டி'சன் பக்கத்தில் வந்து அமர்ந்தார். ஆஹா புடவையாத்தா உனக்கும் பொங்கல் வெச்சிட்டாளான்னு குசலம் விசாரித்துக்கொண்டதில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. நானே தேவலை, நானாவது விக்ரம் படத்தில் "மீண்டும் மீண்டும் வா" டிம்பிள் கபாடியா பாட்டுக்கு அப்புறம் கம்ப்யூட்டரில் ராக்கெட் விடுவது எப்படி, ரோசா படத்தில் "ருக்குமணி ருக்குமணி" பாட்டுக்கப்புறம் அரவிந்த்சாமி மாதிரி கம்ப்யூட்டரில் ஹெட்போனைப் சொருகி பாகிஸ்தான் தீவராதிகள் பேசுவதைக் கேட்பது எப்படி என்று கம்ப்யூட்டர் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தேன், அம்மாபட்டி சிட்டிசனுக்கு அதுவும் தெரியவில்லை. வாத்தியார் மானிட்டர் பத்தி தெரியுமான்னு கேட்டால் "ஏழாவது படிக்கும் போது ஒரு தரம் இருந்திருக்கேன்" என்று சொதப்பிக் கொண்டிருந்தான். அப்புறம் அவன் மண்டையில் தட்டி..."அண்ணா அது ஸ்கூல் மானிட்டர் இல்லைல்ங்கண்ணா...இது கேப்டன் படத்துல தீவிரவியாதி எங்க குண்டு வைத்திருக்கிறார் எத்தனை மணிக்கு வெடிக்கும்ன்னு கோடு போட்டு காண்பிக்குமே டி.வி பொட்டி...அது" என்று வாத்தியார் புரியவைத்தார்.

ஆனால் சிட்டிசன் படு தெகிரியமாய் இருந்தார். கொள்ளக்கூட்ட மொட்டை மாதிரி எல்லாரையும் பாஸ் பாஸ்ன்னு தெம்பாய் கூப்பிட்டார்." கவலைப் படாத பாஸ்..இங்கே சேர்ந்துட்டோம்ல இனிமே ராக்கெட் விடுவதிலிருந்து குஷ்பூ சின்ன வயசில எப்படி இருந்திருப்பார்ன்னு கம்ப்யூட்டரில் கண்டுபிடிப்பது வரை எல்லாமே சொல்லிக் குடுப்பாங்க...அம்பத்தைஞ்சாயிரம் குடுத்திருகோம்ல.."ன்னு எனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னான்.

க்ளாஸ் ஒருவாரம் ஓடியிருக்கும், எங்களாலே நம்பவே முடியவில்லை...ஒரு வடநாட்டு கிளி ஒன்று எங்கள் சிட்டிசன் வரிசையில் வந்து அமர்ந்தது. வடநாட்டு கிளி என்றால் இந்த வடகத்திய ஹீரோக்கள்லாம் கல்யாணம் நிச்சயமான பொண்ணுக்கு ரூட் விடுவார்களே சினிமாவில் அந்த அழகு. ஒரு வேளை நாமளும் கொஞ்சம் பெர்ச்னாலிட்டியாகத் தான் இருக்கோமோ என்று எங்களுக்கே டவுட் வந்துவிட்டது. வாயைத் திறந்தால் ஊத்திக்குமே என்று கொஞ்ச நாள் ஹலோ ஹலோ என்று ஓடியது. இந்த சமயத்தில் தியரி எல்லாம் முடிஞ்சாச்சு இனிமேலிருந்து ப்ராக்டிகல்ஸ் என்று இரண்டு பேருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்று குடுத்துவிட்டார்கள். வடநாட்டு கிளியும் நானும் ஒரு செட்ன்னு வரும், ஐ ஆம் சாரி நான் ஏற்கன்வே கமிட் ஆகிட்டேன், அத்தோட நான் ஆல் இந்தியாவிலேயே முதல் மாணவனா வரனும்ன்னு எங்க மாமாக்கு லட்சியம் இருக்குன்னு டயலாக்கை எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் விதி - காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதுன்னு அம்மாப் பட்டி சிட்டிசன் "பாஸ் நானும் நீயும் ஒரு செட்" என்று ஒட்டிக் கொண்டான். ஆமா பெரிய செட்டு ஷேவிங் செட்டுன்னு கவுண்டமணி கடுப்பில் "டேய் ஒழுங்கா படிச்சு காம்பஸ்ஸுல வேலைய தேத்தப் பாருடா"ன்னு ரெண்டு ஓசி அட்வைஸ் குடுத்தேன்.

ஆனால் ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்களே அது நிஜமாகி தனியாக இருந்த வடநாட்டு கிளியின் கம்ப்யூட்டர் ஏதோ காரணத்தால் பூட் ஆகவில்லை. அதனால் வடநாட்டு கிளி எங்களுடன் வந்து உட்கார்ந்து கொண்டது. முதல் லேப்பில் கீப்போர்ட் பழக வேண்டும் என்று சின்னத்தனமாக ஏதோ ப்ரோக்கிராம் ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு எழுத்தாக மானிட்டரின் மேல் மூலையிலிருந்து விழ ஆரம்பிக்கும் அது கீழே விழுவதற்க்குள் அந்த எழுத்தை கீபோர்ட்டில் அழுத்த வேண்டும்.கம்ப்யூட்டர் வெல்டன் சொல்லும். இது தான் பயிற்சி. க்ளாசில் என்னையும் அம்மாபட்டி சிட்டிசனையும் தவிர யாரும் இந்த ப்ரோக்கிராமை மதிக்கவே இல்லை. வேறேதோ செய்து லெவல் காட்டிக்கொண்டிருந்தார்கள். "பாஸ் இப்ப என் டர்ன்...நான் உங்கள விட ஒரு செகென்ட் முன்னாடியே பிடிச்சிருவேன் பாருங்க"ன்னு சீட்டிசனும் நானும் போட்டிபோட்டுக் கொண்டு கீபோர்ட்டில் லெவல் காட்டிக்கொண்டிருந்ததை கிளி ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மப்பில் கிளி இம்பெரெஸாகிப் பார்த்துகொண்டிருந்தது என்று நினைத்தோம்...இன்று யோசித்தால் சின்னத்தம்பி பிரபு மாதிரி நினைத்திருக்குமோன்னு என்று டவுட் வருகிறது.

ஆனாலும் ஒன்று சொல்ல்வேண்டும் கிளி ரொம்ப நல்ல பெண். எங்கள் கெக்கெபிக்கேதனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாய் பழகினாள். "நம்ம ரெண்டு பேர்ல யாரோ ஒருதர் மேல அதுக்கு ஒரு இது பாஸ்"ன்னு அம்மாபட்டிக்கு ஒரே கிளுகிளுப்பு...சரி சரி எனக்கும் தான். இதற்கு நடுவில் ஒரு மினி ப்ராஜெக்ட் என்று குடுத்து டீம் பிரித்தார்கள். மவுண்ட் ரோட்டில் இருந்த கம்ப்யூட்டர் ட்ரோமில் போய் நாமே முனைந்து செய்யவேண்டும். ஒரு மினி ப்ராஜெக்ட்டுக்கு மூன்று டீம். ஒரு டீமிற்கு இரண்டு பேர் என்று ஆக மொத்தம் ஆறு பேர். அப்போது தான் ரெமோ எங்கள் கூட்டத்தில் வந்து ஐய்க்கியமானான். ரெமோ என்றால் அதே ரெமோ. ஏதோ சுமாரான ஸ்டையிலொடு இருந்தாலும் பெண்கள் கூட்டத்தின் நடுவில் தான் இருப்பான். அவன் பெண்களோடு இல்லாமல் பார்ப்பதற்க்கான வாய்ப்பு...மல்லிகா ஷெராவத் பதினெட்டு முழப் புடவையை தழைய தழைய கட்டிக்கொண்டு வருவதற்கான ப்ராபபிலிட்டி தான்.

ரெமோவுடன் அவன் நண்பிகள் இரண்டு பேரும் என்று எங்கள் டீம் மூன்று மூன்று என்று சம சகிதமாகிவிட்டது. எல்லோருக்கும் ப்ரோக்கிராமில் சந்தேகம் வந்தால் எங்களுக்கு கீபோர்ர்டில் சந்தேகம் வரும் என்று அம்மாபட்டியும் நானுமாயிருந்த ஷேவிங் செட் கலைக்கப்பட்டு, கிளியும் நானும், அம்மாபட்டியும் இன்னொரு பெண்ணும், ரெமோவும் அவன் நண்பியும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Wednesday, August 27, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.2

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1



ஊரில் கொலு என்றால் ஏதோ பேருக்கு ரெண்டு அடுக்கில் நாலு பொம்மை என்றெல்லாம் வைக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்து படிகளுக்கு மேல் இருக்கும். படிக்கு பத்து பன்னிரெண்டு பொம்மைகள் அடுக்கி இருப்பார்கள். அந்த கொலு ஸ்டாண்ட் பெரிய பெரிய உத்திரக் கட்டைகளால் முறுக்கப்பட்டிருக்கும். ஸ்டாண்டை ஒன்று சேர்ப்பதற்கே ஒருநாள் பிடிக்கும். அப்புறம் அதில் அந்த வீட்டு மாமாவின் வெளுத்த வேட்டியை கிழிசல் தெரியாமல் மடித்துப் போட்டு அதன் மேல் பொம்மைகள் பளீரென்று அடுக்கப் பட்டிருக்கும். சில வீடுகளில் எலி கடித்த ஜரிகை வேட்டியெல்லாம் போட்டு பிரமாதப் படுத்தியிருப்பார்கள்.

இந்த கொலு ஸ்டாண்டின் அடியில் இரண்டு மெட்ராஸ் ஒன்டிக் குடித்தனம் நடத்தலாம் - அவ்வளவு பெரியதாக இருக்கும். அதில் தான் அந்த வீட்டு மாமி கொடுக்க வைத்திருக்கும் வெத்தலைப் பாக்கு தட்டுகள், ப்ளவுஸ் பீஸ், சுண்டல் விநியோகம் மற்றும் இன்ன பிற சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும். முக்கால் வாசி வீட்டு மாமாக்களுக்கு இந்த ஸ்டாண்டின் அடியில்தான் எடுபிடி வேலை. கணகச்சிதமாக உட்கார்ந்து கொண்டு கர்மசிரத்தையாய் வெத்தலையை எண்ணி எண்ணி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வெத்தலையை மட்டும் கூட இரண்டு வைத்துவிட்டால் போதும் "மனசில பெரிய மைசூர் மஹாராஜான்னு நினைப்பு...வெத்தலை விக்கிற விலைக்கு நாலு வைச்சா போறாதா..."ன்னு அடிக்கடி மாமியிடமிருந்து டோஸ் விழும். மைசூர் மஹாராஜா இத்தனை அல்பமாக இப்படி உட்கார்ந்து கொண்டா வெத்தலையை அடுக்கிக் கொண்டிருப்பார் என்று அடிக்கடி எனக்கு டவுட் வரும்.

அன்றைக்கு நாங்கள் போன வீட்டில் நல்லவேளையாக அந்த வீட்டு மாமா ஊரில் இல்லை. சேகர் போன உடனேயே எடுபிடி வேகன்ஸியில் ட்யூட்டி ஜாயின் பண்ணிவிட்டார். எங்களை உள்ளே சரியாக வரக்கூட விடாமல் "டேய் இங்க நிறைய வேலை இருக்கு...மாமிக்கு ஹெல்ப் பண்ணனும், கொலுவ வேற ரீ அரேஞ் பண்ணனும் கொஞ்சம் லேட்டாகும் நீங்க கிளம்புங்க"ன்னு புத்தியைக் காட்டிக்கொண்டிருந்தான். இன்னாடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தால் அவனோடு பேவரிட் ஜிகிடி இன்னும் இரண்டு ஜிகிடிகளோடு உட்கார்ந்துகொண்டிருந்தது. அதான் தம்பி, சோலோ சோலையப்பனாக மாற ட்ரை பண்ணுகிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. சேகரை சொல்லி குற்றமில்லை, தெருவில் இருந்த பழக்கம் அப்பிடி. பேவரிட் என்று ஏதாவது ஜொள்ளி ஒரு ஜிகிடி மேல் லேசாக அக்கறை காட்டிவிட்டால் போதும், அந்த ஜிகிடி வரும் போது மற்ற வானரங்கள் நம்மை காய்ச்சு காய்சென்று காய்ச்சி நாற அடித்துவிடும். அப்புறம் அந்த ஜிகிடி மருந்துக்கு கூட நம்மை திரும்பி பார்க்காது. சேகரும் அது நடக்கக் கூடாது என்று பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.

"டேய் ஒத்தையா ரீ அரேஞ்ச் பண்ண முடியாதுடா நாங்களும் ஹெல்ப் பண்றோம்"ன்னு ஒட்டிக்கொண்டோம். "என்னத்த ரீ அரேஞ்ச் பண்ணப் போறேள்....எல்லாம் நல்லாதான் இருக்கு"ன்னு அந்த வீட்டு மாமி வேறு ஜிகிடி கோட்பாடு தெரியாமல் வாரிக்கொண்டிருந்தார். "இல்லை மாமி, சீதா ராமர் பொம்மை இங்கே இருந்தா சிவன் அங்க இருக்கனும், நாய்க்குட்டி இங்க இருக்கனும் பன்னிக்குட்டி படுத்துண்டு இருக்கனும் "ன்னு கொலு அரேஞ்சிங் டெக்னாலஜியில் ஆக்ஸ்போர்ட் ஆர்க்கிடெக்ட் இங்கே அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.

என் கூட வந்த கன்னுக்குட்டி கணேசனுக்கு கொண்டைக் கடலை சுண்டல் என்றால் உயிர். கொண்டைக் கடலை சுண்டலுக்காக எதையும் தியாகம் செய்வான் - தெரு கிரிக்கெட் பேட்டிங் தவிர. அன்றைக்கு மாமி வீட்டில் கொண்டைக் கடலை சுண்டல். கிட்டத்தட்ட முடிந்துவிடுகிற பதத்தில் அடுக்களையிலிருந்து வந்த சுண்டல் வாசனையை மோப்பம் பிடித்தது முதல் கன்னுக்குட்டி கணேசன் கஞ்சா கணேசனாகிவிட்டான். சேகர் பாடு படு திண்டாடமாகிவிட்டது. சேகர் தனியாக கன்னுக்குட்டியை தள்ளிக்கொண்டு போய் எச்சரித்தும் அவன் கண்டுக்கவே இல்லை.

வேறு வழியில்லாமல் கொலு ஆர்க்கிடெக்ட் ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்து "டேய் இங்க வா இந்த கோபுரத்தை பிடிச்சிக்கோ கீழ போட்டுடாத ஜாக்கிரதை"ன்னு என்னை ஜூனியர் எடுபிடியாய் அப்பாயிண்ட் பண்ணிவிட்டார். ஒரு இத்துப் போன பொம்மையை இரண்டாவது வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு ஆர்க்கிடெக்ட் மாத்துவார். அப்புறம் ஈசான மூலையில் நின்று கொண்டு "இங்கேர்ந்து பாரு...இப்ப சூப்பரா இருக்கு இல்ல?"ன்னு என்னிடம் கேட்பான், நானும் "ஆமாண்டா கலக்கலா இருக்கு...லேசா ஒரு பத்து டிகிரி திருப்பி வைச்சா இன்னும் ஓஹோன்னு இருக்கும்"ன்னு ஐடியா குடுப்பேன்.

உட்கார்ந்திருக்கும் ஜிகிடிகள் முகத்தில் "இவர்கள் எப்போ கொலுவ ரீ அரேஞ்ச் பண்ணி நாம எப்ப வெத்தலை பாக்கு வாங்கி வீட்டுக்குப் போவது என்று கவலை படர ஆரம்பித்தது.

இதெயெல்லாம் கண்டுக்காமல் செக்கிழுக்கிற மாட்டுக்கு சிவலிங்கம் தெரியுமான்னு கண்ணுக்குட்டி கணேசன் பாட்டுக்கு கொண்டக் கடலை சுண்டலை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். மாமி சுண்டலை பதமாய் இறக்கி சுடச் சுட பாத்திரத்தோடு கொலு ஸ்டாண்ட் அடியில் கொண்டு வந்து வைத்துவிட்டார். அவ்வளவு தான் கணேசனுக்கு ஸ்டாண்டுக்கு அடியில் போவதற்க்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது.

"டேய் என்னடா சொதப்பிக்கிட்டு இருக்கீங்க...அந்த மூனாவது வரிசையில வேஷ்டி சரியா போடலைடா அதான் வரிசையே கோணலா தெரியுது..இரு நான் கொலு ஸ்டாண்ட் அடி வழியா அத சரி பண்றேன் நீங்க மேல கரெக்டா இருக்கான்ன்னு பாருங்கன்னு" உள்ளே புகுந்துவிட்டான். அந்த வரிசையில் செட்டியார் பொம்மை ஒன்று சுத்தி சின்ன சின்ன பாத்திரங்களில் அரிசி, பருப்பு நிரப்பப் பட்டு உண்மையாகவே அழகாக வைக்கப் பட்டிருந்தது. சேகரால் கன்னுக்குட்டியை ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை.

உள்ளே போன கன்னுக்குட்டி கணேசன் நேராய் போய் அவசர அவசரமாய் ஒரு கரண்டி சுண்டலை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்ள, இருந்த சூட்டில் வாய் பொள்ளிப் போய்விட்டது. சூடு பட்ட கணேசன் பேருக்கேத்த மாதிரி கன்னுக்குட்டி மாதிரி துள்ள அவன் மண்டை ஸ்டாண்டில் தட்டி பொம்மைகள் குலுகுலுங்க செட்டியார் பொம்மை நங்கென்று தரையில் விழுந்துவிட்டது. நல்ல கணமான பொம்மை என்பதால் நல்ல வேளை நொறுங்கவில்லை. உடைந்திருந்தால் அன்று மாமி எங்களை பின்னிப் பெடலெடுத்து கொலு ஸ்டாண்ட் படிகளாக்கியிருப்பார். பெருமூச்சு விட்டுக் கொண்டே அவசர அவசரமாய் செட்டியார் பொம்மையை நானும் சேகரும் திரும்ப எடுத்த போது தான் பார்த்தோம், கழுத்தில் கீறல் விழுந்து செட்டியார் தலை வேறு உடல் வேறாக ஆகியிருந்தார்.

எனக்கு அந்த மாமியின் தசாவதாரம் பற்றி நன்றாகத் தெரியுமாகையால் கைகால் வெலவெலத்து விட்டது.

"டேய்....!! செட்டியார் மண்டையைப் போட்டுட்டார்டா....."ன்னு நான் பயந்து கொண்டே சொல்லும் போதும் கூட சேகருக்கு ஜிகிடி போதை இறங்கவில்லை.

"டேய் நல்ல நாளும் அதுவுமா இவங்கள்லாம் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருக்கும் போது இப்படி அமங்கலமா சொல்லாதடா...செட்டியார் பொம்மை உடைஞ்சிருச்சுன்னு அழகா சொல்லு"ன்னு ஜிகிடிகள் முன்னால் ஆர்க்கிடெக்ட் எனக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு கடுப்பாகிவிட்டது. "இப்போ மாமி அடுக்களையிலிருந்து வருவாங்க...நீயே அமங்கலமா இல்லாம இப்ப சொன்ன மாதிரி அழகா விஷயத்தை சொல்லு. எனக்கு சந்தைக்கு போனும் ஆத்தா வையும்"ன்னு திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.

நல்ல மாட்டுக்குத் தான் ஒரு சூடு என்று கண்ணுக்குட்டி கணேசனும் சுண்டலுக்கு ஆசைப்பட்டு அங்கு தங்கிவிட்டான். அப்புறம் அடுத்த நாள் தெரு கிரிக்கெட்டில் விஷயம் அரசல் புரசலாய் வெளியே வந்தது. மாமிக்கு செட்டியார் பொம்மை கார்த்திகை வகையாக தமையன் வாங்கிக்கொடுத்த சென்டிமென்ட்டாம். ஜிகிடிகள் முன்னால் சேகருக்கும் கன்னுக்குட்டிக்கும், மாமாக்கு விடும் டோஸைவிட இரண்டு மடங்கு அதிகமாக டபுள் ஸ்ட்ராங் டோஸில் மாமி வறுத்து எடுத்துவிட்டாராம். அத்தனை தடபுடலிலும் கன்னுக்குட்டி கணேசன் இரண்டு கரண்டி கொண்டைக் கடலை சுண்டலை உஷார் பண்ணிவிட்டான்.

அதற்கப்புறம் ஜிகிடிகள் வட்டாரத்தில் சீன் போட்டுக்கொண்டிருந்த குல"சேகர்" கொலுசேகர் என்று பெருமையுடன் வழங்கப்பட்டு வந்தார்.

இப்போதும் செட்டியார் பொம்மையைப் பார்த்தால் எனக்கு சேகரின் "செட்டியார் மண்டையைப் போட்ட்டுட்டார்..." அமங்கல அட்வைஸ் தான் நியாபகத்துக்கு வரும்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Monday, August 25, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.1

ஜொள்ளித் திரிந்த காலம் - முதல் பாகம் படிக்க --> இங்கே

ரொம்ப நாளாக கையை அரித்துக்கொண்டு இருந்தது. ஜொள்ளித் திரிந்த காலம் முடித்த போது...சே கொஞ்சம் அவசரப்பட்டு முடித்துவிட்டோமோ...கேவலம் பதினொன்று அத்தியாயங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ. என்றும்..இல்லை இல்லை அலுத்துப் போயிருக்கும் கரெக்டாய் முடித்ததினால் தான் நிறையபேருக்கு பிடித்தது என்று மனசுக்குள் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஓரமாய் நெருப்பு எரிந்து கொண்டே இருந்தது. இந்த வலைப்பதிவு மூலமாக வந்த நண்பர்களும் வேறு அதற்கு அப்போ அப்போ நெய் ஊத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாடா பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு நைஸாக ஆரம்பித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எலியன், தி ரிங், போன்ற sequel பெயிலியர்கள் நினைவுக்கு வந்து பயமுறுகின்றன என்றாலும் மனதில் பட்டதை தான் முக்கால் வாசி இந்த வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன் அது தான் இதுவரை எனக்கு நிறைய நண்பர்களை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பதால் அவ்வழியையே கடை பிடிக்கிறேன். வாரத்திற்கு ஒரு பதிவாவது போடவேண்டும் என்று கொப்புரானே சத்தியமாய் சொல்கிறேன் நானும் முயன்று பார்க்கிறேன். வரப்பு கட்டனும் வாய்க்கால் வெட்டனும்ன்னு ஏதாவது வேலை வந்து விடுகிறது. அத்தோடு அந்த வேலைகள் சம்பந்தமான டென்ஷன் வேறு. மனது டென்ஷனில்லாமல் சந்தோஷமாக இருந்தால் தான் எழுதுவது இயல்பாக வருகிறது இல்லையென்றால் எழுதிவிட்டு படித்தால் பிடிக்கமாட்டேங்கிறது இதில் அதை வேறு போட்டு உங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமா?

ஊரில் உள்ளவர்கள், இங்கே படிப்பவர்கள் என்று உங்கள் எல்லார் மேலும் பழியைப் போட்டுவிட்டு ஜொள்ளித் திரிந்த காலத்தை மீண்டும் ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் வழக்கம் போல் காறித் துப்புவதற்கு தடை ஏதுமில்லை...:)
************************************************************

நவராத்திரி வந்தாலே ஊர்ப்பக்கம் கோலாகலம் தான். சாயங்காலம் நாலு மணிக்கே அல்லோலப் பட ஆரம்பித்துவிடும். அரும்பு மல்லீஈஈஈ என்று பூக்காரர் உதிராய் மல்லிகைப் பூவை உழக்கில் அளந்து விற்க ஆரம்பித்துவிடுவார். வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் உழக்கு உழக்காய் வாங்குவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் அப்பாவி அப்பாவும், உழக்கை விட ஓரடி உசரமாய் இருக்கும் கடைக்குட்டி தம்பியும் தையல்காரர் மாதிரி ஊசி நூல் வைத்துக்கொண்டு பூவைத் தொடுக்க ஆரம்பிப்பார்கள். ஐந்தரை மணிக்கு வயசுப் பெண்களெல்லாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு அம்சமான கலரில் பட்டுப்பாவாடை/ பாவாடை தாவணியணிந்து கொண்டு கோவிலுக்கு போவார்கள். சும்மா போக மாட்டார்கள்.

மேற்கு அத்தத்தில்(எல்லையில்) இருக்கும் கோவிலுக்கு போவதற்கு முதலில் ஒரு ஜிகிடி கிழக்குக் கோடிக்கு போய் கோவிலுக்குப் போகலா ரெம்பாவாய் என்று செட் சேர்க்கும். முதலில் போகும் அந்த ஜிகிடி தனியாகப் போகாது, கூடவே ஒரு அல்லக்கை போகும். தெருவில் இருக்கும் வானரங்கள் எல்லாம் ஐந்து மணியோடு தெரு கிரிக்கெட்டை மூட்டை கட்டிவிட்டு ஐந்தரை மணிக்குள் வீட்டில் இருக்கும் பவுடரை கிவுடரை பூசி இல்லாத பெர்ச்னாலிட்டியை ஏத்தி தெருவில் ஸ்டாட்டிஜிக் பொசிஷனில் கூடி இருப்போம். கிங்பெல் சில சமயம் கடமை தவறிவிடுவான். "எண்பத்தி ஏழுல வெஸ்ட் இன்டீஸ் மெட்சில கவாஸ்கர் லாங் ஆன்ல ஒரு வீசு வீசுனார் பாரு"ன்னு என்னம்மோ கவாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கொள்கிற மாதிரி அவரைப் பற்றி ஸ்லாகித்துப் பேசிக்கொண்டிருப்பான். இதற்க்குள் "டேய் சீக்கிரம் வாடா இதுக்குத் தான் நீ வர வேண்டாம்ன்னு சொன்னேன்"ன்னு கிழக்கே போகும் முதல் ஜிகிடி அல்லக்கையிடம் பேசுவது போல் கடமையை கோடிட்டி காட்டிவிட்டுப் போகும். மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார் என்று அப்புறம் எல்லாரும் கடமையில் உஷாராகிவிடுவோம்.

கிழக்கே போன (ஜிகிடி) ரயில், கூட்டம் சேர்ந்து மேற்கில் கோவிலை அடைந்தவுடன் இங்கே கடமை அதீத நிலையை அடையும். "ஓக்கேடா அப்புறம் பார்க்கலாம்...முக்கியமான வேலை இருக்கு...எங்கம்மா டெய்லி சனீஸ்வரனுக்கு அடிப்பிரத்ட்சணம் வைக்கனும்னு சொல்லி இருக்கா" என்று நைஸாக சில வானரங்கள் நழுவப் பார்க்கும். "டேய் சனீஸ்வரனே சனீஸ்வரனுக்கு அடிப்பிரதட்சணம் வைக்கிறத நாங்க பார்த்ததே இல்லைடா நாங்களும் வரோம்"ன்னு கோவிலை நோக்கி படையெடுப்போம். நாலு ஜிகிடிகள் சுத்துவட்டாரத்தில் இருந்தால் போறாதா...சரஸ்வதி சபதம் ஊமை சிவாஜி போல் ஃபீலிங் காட்டி வானரங்கள் மணியடிப்பதும், உதட்டை முனுமுனுத்துக்கொண்டு "சொல்லடி அபிராமி" ரேஞ்சுக்கு பந்தா காட்டுவதும், பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும் என்று சும்மா இருந்த சிரங்கை சொறிந்து விட்டாற் போல் கோவில் ஆகிவிடும். சிலதுகள் அடிப்பிரதட்சணம் வைக்கிறேன் விழுந்து கும்புடுகிறேன் என்று போடும் சீன் இருக்கே...தலையில் ஒரு குடத்தை வைத்தால் மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும்.

இதில் பெரிய இம்சை என்னவென்றால் போட்ட சீன் வொர்க்கவுட் ஆச்சான்னு சீன் போடுகிற வானரம் அடுத்தவர்களிடம் கேட்டுத் தான் விபரம் தெரிந்து கொள்ளமுடியும். அவ்வளவு டெடிகேஷனோடு சீன் போட்டுக்கொண்டிருக்கும். ஒரு வேளை போட்ட சீன் வொர்கவுட் ஆனாலும் ஒருத்தரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். "டேய் அவ இன்னிக்கு என்ன பார்த்தாடா...எனக்கு கண்டிப்பா தெரியும்"ன்னு சாதித்தாலும் நடக்காது. "ஆமாண்டா பார்திருப்பா பார்த்திருப்பா நீ கழுத்துல அப்பிண்டிருக்கிற வீபூதியைப் பார்த்து அனுமாருக்கு வெண்ணைக் காப்பு சாத்திருக்கோன்னு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும், கண்டிப்பா பார்த்திருப்பா" - வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேஸ் தான்.

இதையெல்லாம் மீறி ஒருவேளை அம்பாள் வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார். "மணியடிச்சா கரெக்ட்டா வந்துருவேளே....சுண்டலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்! எல்லாம் பூஜையெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான்" என்று நேரம் பார்த்து மானத்தை வாங்கிவிடுவார். தெருவில் வானர கூட்டத்தின் ரெப்யூடேஷன் அப்படி. நவராத்திரி மற்றும் விசேஷமான காலங்களில் தெருவில் இருக்கும் பெண்மணிகள் எல்லாரும் சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் ராகத்தோடு சொல்லுவார்கள். "டேய் நாமளும் அவங்களோடு சேர்ந்து கூட உட்கார்ந்து புஸ்தகத்தை பார்த்து ஸ்லோகம் சொல்லி அசத்தினோம்ன்னு வெச்சிக்கோயேன்... நம்ம பக்திய மெச்சி நாளைக்கு உங்க வீட்டிலயும் நாளக்கழிச்சி எங்க வீட்டுலயும் பொண்ணு குடுக்க வரிசையில நிப்பாங்க"ன்னு முப்பது நாளில் மாப்பிள்ளை ஆவதற்க்கு ஒரு தரம் கூட இருந்த குரங்கு ஒன்று ஐடியா குடுத்தது. ஆஹா சூப்பர் ஐடியா என்று உட்கார்ந்தால் நம்ம நேரம் - அன்று பார்த்து கொஞ்ச நேரத்திலேயே ஜிகிடிகள் கூட்டம் பொறுப்பாய் படிக்க எழுந்து போய் விட்டது.

சரி இப்ப முடிந்துவிடும் நாமும் கிளம்பிவிடலாமென்று பார்த்தால் இங்கே மாமிகள் முடிக்கிற வழியக் காணும். இந்த ஸ்லோகம் இந்த ஸ்லோகம் என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் பக்கதிலிருந்த கிங்க் காங்க் மாமி வேறு சந்தேகத்தோடு அடிக்கடி பார்க்கிறாரென்று கூட இருந்த குரங்கு மண்டயை ஆட்டி ஆட்டி சீனாக்காரனுக்கு புரையேறிய மாதிரி மந்திரம் சொல்லி நடித்துக் கொண்டிருந்தது. நானும் அவ்வை ஷண்முகி நாசர் காய்த்த்ரீ மந்திரம் சொல்வது மாதிரி ஏதோ ஆக்ட் குடுத்து நழுவ ஆரம்பிக்கும் போது கரெக்டாய் சீனாதானா மாமா எங்கிருந்தோ வந்துவிட்டார். "ம்ம்ம் அப்படித்தான் ...மந்திரமெல்லாம் நல்ல ஸ்பஷ்டமாய் சொல்லனும்" என்று அவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.

நவராத்திரியில் கோவில் சின்ன அத்தியாயம் தான். தெருவில் முக்கால் வாசி வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். கொலு வைத்தவர்கள் வீட்டில் இந்த நாளில் இன்னார் என்று எல்லாரையும் நாள் விகிதமாக வெத்தலைபாக்கு வாங்கிக் கொள்ள தெரு முழுவதும் கூப்பிட்டிருப்பார்கள். அப்படி கூப்பிட்ட வீடுகளுக்கு ஜிகிடிகளும் அவர்கள் அம்மாக்களும் போவார்கள். ரொம்ப சின்னப் பையன்களுக்கெல்லாம் இந்த இன்விடேஷன் தேவையில்லை "மாமி கொலு இருக்கா"ன்னு கேட்டுக்கொண்டே உள்ளே போனால் சுண்டல் தருவார்கள். ஆனால் வயதுப் பையன்களுக்கு இதெல்லாம் மானப் பிரச்சனை. கூப்பிடாமல் போக முடியாது. ஆனால் ரொம்ப தெரிந்த மாமியாக இருந்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு ஜிகிடி போன சமயமாய் உள்ளே கேஷுவல் விசிட் அடிக்கலாம்.

தெருவில் எல்லா மாமிகளுக்கும் ஒரு வம்பான பழக்கம் உண்டு. ஜிகிடிகள் யாராவது வெத்தலைபாக்கு வாங்க வந்தால் பாட்டு பாடினால் தான் உண்டு என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதுவும் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண் என்று தெரிந்துவிட்டால் போதும் பாடினால் தான் எல்லாருக்கும் சுண்டல் கிடைக்கும் அதுவரைக்கும் கொலுவையும் சுண்டலையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கனும். அதிலும் சில மாமிகள் "அலை பாயுதே" பாடுடீன்னு நேயர் விருப்பமெல்லாம் வேறு வைப்பார்கள். சில ஜிகிடிகள் நன்றாக பாடும் சிலதுகள் சுமாராய் பாடும், சிலதுகள் பாடினால் கொலை பாயுதே தான். இருந்தாலும் அந்த வீட்டு மாமி "நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னு வீண் ஜம்பம் விடுவார், அப்புறம் நிம்மியின் கொலைபாயுதே கானமழை தெருவெல்லாம் எல்லார் வீட்டிலும் பொழியும்.

மேலே சொன்ன மாதிரி கொஞ்சம் நல்ல பழக்கமான மாமி வீடு என்றால் ஜிகிடிகள் உள்ளே போன ஐந்தாவது நிமிஷத்தில் "கொஞ்சம் தண்ணி தாங்கோ மாமி ...அட உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா"ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முதல் வானரம் நைஸா இடத்தைப் பிடிக்கும். பின்னாடியே "சேகர் இங்கே வந்தானா.."ன்னு கேட்டுக்கொண்டே அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் மற்ற வானரங்கள் மடத்தை பிடிக்கும்.

இப்படி ஒருதரம் சேகரை தேடிக்கொண்டு நானும் கன்னுக்குட்டி கணேசனும் போன போது உள்ளே சேகர் ஓவராய் பிலிம் போட்டுக்கொண்டிருந்தார்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Tuesday, July 29, 2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - படங்கள்

...மற்றும் விபரங்கள் என்று தலைப்பு வைத்தால் இந்தப் பதிவைப் போல் நீளமாகிவிடும். அதனால் "எப்பவோ நடந்த"-என்பதை தலைப்பில் தவிர்த்திருக்கிறேன் :)

படங்கள் கீழே கடைசியில் இருக்கின்றன.


ஊருக்கு கிளம்புவதற்கு இரண்டு வாரங்கள் முன் நண்பர் கதிர் வலைப்பதிவை படித்து விட்டு ஒரு மடல் தட்டி இருந்தார். முதல் மடல் என்பதால் மானே தேனே போட்டிருந்தார். ஆஹா ஒரு விக்கெட் விழுந்தாச்சு...சென்னையில் சந்திக்கலாமா (போண்டாக்கு ஆச்சு) என்று நூல்விட்டுப் பார்த்தேன். கண்டிப்பாக என்று தெகிரியம் குடுத்ததில் சரி நெல்லை சந்திப்பு மாதிரி சொந்த செலவில் போண்டா என்று பிசுபிசுக்காது என்று கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அடுத்தடுத்து போண்டா என்ன போண்டா, சாப்பாட்டுக்கே நாங்க கியாரண்ட்டி என்று குரு நிஷா, டோண்டு, பிரகாஷ், உண்மைத் தமிழன், பாபா, பிரபு கார்த்திக் - லிஸ்டு மெதுவாக நீண்டது. எதுக்கும் ஒரு தரம் ஃபோன் பண்ணி கண்பர்ம் பண்ணுவோம் என்று நம்பர் தந்த அனைவருக்கும் டயல் செய்ய ஆரம்பித்த உடனேயே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.

"சிட்டி சென்டர் சரி சார் ஆனா கரெக்டா எங்க? டி.நகரா, மைலாப்பூரா...எந்த இடம்? என்று டோண்டு கேட்டவுடன் எனக்கு குழம்பிவிட்டது. விட்கோ மாதிரி இல்லையே எனக்கு தெரிந்து சிட்டி சென்டர் ஒரு இடத்தில் தானே இருக்கிறது என்று அப்புறம் நான் சொன்னது நகர மையம் இல்லை ராதாகிருஷ்ணன் சாலை ஷாப்பிங் மால் என்று விளக்கிச் சொல்லி போனை வைத்தால், மனுஷன் அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் திரும்ப கூப்பிட்டு "சிட்டி சென்டருக்கு நீங்க இங்கேர்ந்து வந்தா இப்படி வரனும், அங்கேர்ந்து வந்தா அப்படி வரனும்"ன்னு ஒரு அல்வா குடுத்தார் பாருங்கள்...கரெக்ட் பதத்தில் வந்திருந்தது.

ஐகாரஸ் பிரகாஷ் மீட்டிங்கில் இருந்ததால் அவர் நண்பர் தான் போனை எடுத்தார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு நான் ஐ.சி.ஐ.சியையோ என்று சந்தேகம் என்று நினைக்கிறேன். நான் வேற ஏகப்பட்ட சொதப்பல்

பிரண்டா...? லண்டனா? இப்போ எங்கேர்ந்து பேசறீங்க? உங்க பேரு என்ன? என் பேரு இது..ஆனா டுபுக்கு சொன்னா தான் தெரியும்ன்னு சொன்னவுடன் ஒரு ஐந்து வினாடி மௌனம்....அவர திரும்ப பேசச் சொல்றேங்கன்னு உஷாராக வைத்தார்.

பிரபு கார்த்திக் கரெக்டாக லஞ்ச் டயமில் மாட்டிக்கொண்டார் "இங்கிலீஷ் ப்ளாகெர்ஸ்லாம் நிறைய பேர் இருக்காங்களே..நீங்க ஏன் ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு பந்தாவா ப்ளாகர்ஸ் மீட்க்கு வரக்கூடாது" என்று கூட்டத்துக்கு அடியப் போட்டவுடன் பிரபு கார்த்திக் "(ஆபிஸுல) மீட்டிங்க்கு போனும் மேடம் வைய்யும்"ன்னு நழுவிட்டார். இருந்தாலும் உடனே செல் நம்பரை மாற்றாமல் பொறுப்பாய் அடுத்த நாள் சந்திப்புக்கு அவ்யுக்தாவை அழைத்துவந்தார்.

சிட்டி சென்டர் வாசலில் இரண்டு பேர் டுபுக்குன்னு அவர்களுக்குள் விளித்துக்கொண்டது தெரியாமல் அவர்களும் ப்ளாகர்ஸ் மீட் தான் போலன்னு போய் வழிந்து சுதாரித்து அப்புறம் நாலாவது மாடிக்கு எப்படி போகனும்ன்னு வழி கேட்டு அவர்களும் "எல்லா இடத்தையும் மாதிரி இங்கையும் மேலே தான் போகனும்"ன்னு பொறுப்பாய் வழி சொல்லி, நான் போன அப்புறம் துப்புகிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனால் தோளை தட்டி "நீங்க டுபுக்கு தானே" என்று ஒருவர் கேட்டார். சரிதான் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருக்கு போல என்று இந்த தரம் சொதப்பினால் மூனாவது மாடிக்கு வழி கேட்கலாம் என்று கூச்சமே இல்லாமல் ஆமாம் நானே தான் டுபுக்கு என்றவுடன் செந்தில் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.


(குரு) நிஷா தவிர , கட்டாயம் வருகிறேன் என்று அடித்து சொன்ன அம்மணிகள் எல்லாரும் கரெக்ட்டாய் டிமிக்கி குடுத்துவிட்டார்கள். சொல்லி வைத்தாற் போல எல்லாருக்கும் கடைசிக்கு முந்தின நிமிடத்தில் வேலை வந்துவிட்டது. அதிலும் நித்யாவிற்கு ஆட்டோவில் ஏறியதுக்கு அப்புறம் ஆபிஸில் கூப்பிட்டு சனிக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு அப்ரைசல் வைத்துவிட்டார்கள். அம்பிக்கு முந்தின நாளே தங்கமணியிடம் பெர்மிஷன் கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியுமாகையால் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அம்பி போன் போட்டு நங்கநல்லூரில் பனி மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் வரமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்தார். விக்கியும் குருவும் ஏன் பெண் பதிவர்கள் ஒருவரும் வரவில்லை என்று என்னிடம் ஏமாற்ற தொனியில் கேட்கவே இல்லை. அதிலும் விக்கிக்கு ஏகப்பட்ட வருத்தம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. பதினான்கு பேர்கள் வந்திருந்தோம். ஓரிரண்டு பேரைத் தவிர முந்தின நாளே தொலைபேசியிருந்ததால் தெம்பாகவே போயிருந்தேன். போன பிறகு தான் அடுத்த நாள் இன்னோரு மாபெரும் வலைப்பதிவர் கூட்டம் ஒன்று நடக்கப்போவதாக தெரிந்தது. தெரிந்திருந்தால் அந்த நாளிலேயே போய் ஜோதியில் ஐய்க்கியமாகியிருப்பேன்.


குரு நிஷா முதலிலேயே சிட்டி சென்டருக்கு வந்து சாப்பாடுகடையை முடித்துவிட்டார்கள். படு க்யூட்டான குழந்தைகளை பார்த்துக்கொள்ள நிஷா கிளம்ப்பி முதல் மாடிக்குச் செல்ல மெதுவாக எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். பாபா இரண்டு சேர் தள்ளி முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டு சாப்பாடு ஒரு கட்டு கட்டி முடித்தவுடன் நைஸாக போன் பண்ணி எங்கே இருக்கிறீகள் என்று புதுசா கேட்கிற மாதிரி கேட்டு ஜோதியில் சேர்ந்துகொண்டார்.

கதிர், செந்தில், இகாரஸ் பிரகாஷ், உண்மைத்தமிழன், பாபா, பாபாவின் அண்ணன், விக்கி, சிமுலேஷன், டோண்டு, அவ்யுக்த்தா, குரு, பிரபு கார்த்திக் என்று நீளமேசை மாநாடு தொடங்கியது. சமுதாயம், தமிழ், வலைப்பதிவுகளின் எதிர்காலம் - என்று பொறுப்பில்லாமல் பேசாமல், அனானி ஆட்டம், ஏன் அனானிக்கள் சில பதிவுகளை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள், இட்லி வடை இந்நேரம் இந்த சந்திப்பு போட்டோக்களை ரிலீஸ் பண்ணியிருப்பாரா? ப்ளாகர்ஸ் மீட் நடத்த சென்னையில் இது மாதிரி கல்ர்புல்லான இடங்கள் வேறென்ன என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மைத்தமிழன் கடமை வீரராக பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த காதல் ஜோடிகள் ஒரு மணிநேரமாய் ஒரு சூஸை உறிஞ்சிக்கொண்டே கடலைப் பார்த்து கடலை போட்டுக்கொண்டிருந்ததை சொல்லி பெருமூச்சோடு சமூக பிரக்ஞை காட்டினார்.

டோண்டுவுக்கு போரடித்துவிட்டது என்று நினைக்கிறேன், அடிக்காத போனை காதில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து கூப்பிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். வீட்டில் விருந்தாளிகள் வந்து காத்துக்கொண்டிருப்பார்களே என்று கேட்பதற்கு முன் அவரும் அதையே சொல்லி அப்பீட் ஆகிவிட்டார். சிமுலேஷனும் ஜூட் விட மீதமிருந்த கூட்டம் பீச்சுக்கு போய் காத்தாட உட்கார்ந்து பேசலாம் என்று கிளம்பினோம். நடுவில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளாமல் அப்படி என்ன பீச்சுக்குப் போய் அரட்டை என்று நிஷா குடுத்த மண்டகப்பிடியில் "எனக்கு பீச்சுல கண்டம்" என்று குருவும் ஒதுங்கிக் கொண்டார்.

பீச்சுக்கு போன மிச்சம் பத்துபேரும் ஐ.நா சபை மாதிரி ஒரு முடிவுக்கே வராமல் நிறைய விஷயங்களைப் பேசினோம். பாபாவிற்க்கு ட்விட்டரிலிருந்து எவ்வளவு கமிஷன் என்று கேட்ட மறந்துவிட்டது. டிவிட்டர் பற்றி நிறைய பேசினார். பி.கே, அவ்யுக்தா, விக்கி, கதிர் பிரகாஷ் எல்லாரும் பல்வேறு விஷயங்களில் லெவல் காட்டினார்கள். உண்மைத்தமிழன் இனிமையாக பழகினார். நான் வழக்கம் போல தமிழ் திரையுலகில் மலையாள மற்றும் மும்பை நடிகைகளின் மேலாண்மை குறித்தும், மேற்படி சமூகத்தின் தாக்கத்தை இல்லறம் தாக்காமல் சமச்சீருடன் நெறியாள்கை புரிவது எப்படி என்று கருத்தாடலில் ஈடுபட்டேன்.

மொத்தத்தில் நிறைய பேரை சந்தித்ததில் மிக இனிமையாக இருந்தது ஆனாலும் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சந்தித்திருந்தால் இன்னும் சுவாரசியமாக பேசியிருக்கலாமோ என்று தோன்றியது உண்மை.(அவர்களுக்கும் இதுவே தோன்றியதா தெரியவில்லை).

அடுத்த நாள் நண்பர் ஆடுமாடு-வை சந்திக்க முடிந்தது. மிக சுவாரசியமான மனிதர் சுவாரசியமான வேலை வேறு பார்க்கிறார். என்னுடைய சேலஞ்ச் விஷ்யத்தில் ஏற்கனவே உதவி செய்வதாக வக்களித்ததை மறக்காமல் சினிமாவில் தலையைக் காட்டுவதற்க்கு இயக்குனர் வசந்தபாலனிடம் வேறு பேசி வைத்திருந்தார். அக்டோபரில் திரும்ப வருவேன் அதற்குள் பெர்சனாலிட்டியை ஏத்தி "சார் போஸ்ட்" டயலாக் எல்லாம் பேசி பழகிவருகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் முன்னாடியே வார்னிங் கொடுத்துக்கொள்கிறேன் :))

இதில் சந்தித்தவர்களிடம் கேட்க மறந்த இன்ன பிற கேள்விகள்

•பிரகாஷ் - ஐகாரஸ் - காரணப் பெயரா?
•பாபா - ப்ளாகர்ஸ் மீட்டுக்கெல்லாம் முக்கா டவுசர் போட்டுகிட்டு வருகிற இரகசியம் என்ன? இந்த முறையும் என்.ஆர்.ஐ கோட்பாடின் படி ரோட்டோர பாட்டி, சுவரோர போஸ்டர், சூச்சா போகிற நாய்குட்டி நிழற்படங்கள் எடுத்தீர்களா?
•கதிர் - வெறும்ன படித்துவிட்டு ஊக்குவிக்கிற உங்கள் எனர்ஜி எங்கிருந்து சீக்கிரட் என்ன?
•செந்தில் - அடுத்த தரமாவது காராசேவ் வாங்கித் தருவீங்களா?
•பிரபு கார்த்திக் - என்னை வைத்து சூசகமாக He- He சீரிஸில் மேட்டர் ஏதாவது வருமா?








Monday, July 14, 2008

சென்னை

பி.ஏ.வில் தனியாக ஜாலியாக போனால் பக்கத்தில் ஐம்பத்தியைந்து வயது தாண்டிய மாமி பாட்டியும், பின்னால் சீட்டை காலால் அடிக்கடி எட்டி உதைக்கிற வாண்டும் உட்காரக் கடவது என்று எனக்கு எழுதி இருக்கிறது. இது போக நான் உட்கார்ந்திருக்கிற பக்கம் ஆம்பிளை கம்மனாட்டி க்ரூ மெம்பர் தான் உபசாரத்துக்கு வரவேண்டும் என்று தங்கமணியின் சாபம் வேறு பலித்து தொலைகிறது. இதுக்கு பேசாமல் கஜகஸ்தான் ஏர்லைன்சிலேயே போயிருக்கலாம்.

வேறு வழியே இல்லாமல் தூங்கிய மூன்று மணி நேரம் போக மீதி ஏழு மணி நேரத்தை ஓட்ட டாம் ஹான்க்ஸ் நடித்த சார்லி வில்சன்ஸ் வார் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது நல்ல படம். பட ஆரம்பத்தில் ஹாட் டப்பில் வெள்ளைக்கார குழந்தைகள் பிறந்தமேனியாக குளிக்கும் போது மட்டும் பக்கத்தில் வயதான பெண்மணி இருக்கிறாரே என்று கொஞ்சம் நெளிய வேண்டி இருந்தது. அதற்கப்புறம் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா எப்படி ரஷ்யாவின் முதுகில் குத்தியது என்று படம் சுத்த சைவமாக போனது. அப்புறம் பேச்சு குடுத்ததில் தான் தெரிந்தது பக்கத்திலிருந்தவர் பத்மா ஷேஷாத்திரி பள்ளி முதல்வர். இரண்டாவது முறை படம் ஓட ஆரம்பித்த போது திரும்பவும் ஹாட் டப் சீனெல்லாம் பார்க்காமல் ரொம்ப நல்ல பிள்ளையாக பள்ளி முதல்வரிடம் இந்தக் கால ஸ்டூடன்ட்ஸைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் ஆச்சரியகரமாக சென்னை தூத்துக்குடி ஏர் டெக்கான் கலக்கலாய் இருந்தது. அனேகமாய் அந்த ப்ளைட் மும்பாயிலிருந்தோ குஜராத்திலிருந்தோ வருகிறது. இத்துனூன்டு ட்வின் ப்ரொப்பெலர் விமானத்துக்கு கண்ணுக்கு குளுமையாய் இரண்டு ஏர்ஹோஸ்டஸ். அருமையான சர்வீஸ் வேறு.

சென்னை சென்னை தான். மைலாப்பூரென்ன, பாண்டி பஜாரென்ன, ஸ்பென்சர், சிட்டி சென்டர் ஷாப்பிங் மால்ஸென்ன...சூப்பராக இருக்கிறது. ஷாப்பிங் மால்கள் எல்லாம் நவநாகரீக நங்கைகள் வலம் வர இன்னமும் மிக அழகாக இருக்கின்றன. என்ன விலைவாசி ஒன்று தான் ஷாக் அடித்தது. "டேக் த ட்வெண்டி பைவ்"ன்னு அசால்ட்டாக மக்கள் பணத்தை வீசி எறிந்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். மீறி பேரம் பேசியதில் "இந்த பேரதுக்கு ...லண்டன்ல இருக்கன்னு மட்டும் மூச்சு விட்டுறாத..கொன்னே போட்ருவாங்க"ன்னு வார்னிங்க தான் கிடைத்தது. ஒன்னே ஒன்னுங்க...நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பச்சையப்பாவிலிருந்து ஆழ்வார்பேட் சிக்னலுக்கு அறுபது ரூபாய் மூன்று வருடம் முன்னாலேயே வாங்குவார்கள் என்று எனகுத் தோன்றியது. இன்னமும் அதே தான். எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.

துணிக்கடைகளில் ட்ரெஸ்ஸில் துணி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ற மாதிரி பில்லில் கூட்டி இருந்தார்கள். ஹெம் அடிக்காத கிழித்துவிட்ட முக்கால் டவுசர் அதே துணியில் இருந்த முழுப் பேண்ட்டைவிட விலை கூடுதல். "பேசாம முழு பேண்டை வாங்கி நாமளே கிழிச்சிக்கலாமே என்ற ஐடியா வீட்டில் யாருக்கும் தோணாமல் 'உன்னை எப்படி லண்டன்ல அலோ பண்ணினாங்க..பைல்ட் கிட்ட சொல்லி போற வழியில் அரபிக் கடல்ல தள்ளிட்டு போகச் சொல்லறேன்' என்று சமுதாய அக்கறை தான் விஞ்சியது. ஆழ்வார்பேட் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தை ஏதோ ஒரு பாங்க் ஏற்றுக்கொண்டு டெய்லி சாய்ங்காலம் டிபன் போடுகிறார்கள். வீட்டில் எல்லாரும் அது பிராசதம் என்று பஜனை பாடினாலும் அக்காக்களின் உபயத்தில் கோயிலுக்கு போகாமலேயே டெய்லி டிபன் கிடைத்தது.

அக்கா பசங்களெல்லாம் பெரிய பையன்களாகிவிட்டார்கள். டெஸ்க்டாப்பில் அசின் மற்றும் பெயர் தெரியாத இன்ன பிற மாதுக்கள் மிளிர்கிறார்கள். பிலிம்மி சானல் புண்யத்தில் ஏஞ்சலினா ஜோலிக்கு பிறகு காலியாயிருந்த தன்னிகரலில்லா தலைவி பதவியை ஒருவழியாக நிரப்ப முடிந்தது. கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு இம்ப்ரெஸ்ஸாகி இந்த புது தலைவி பற்றி விஷயங்கள் சேகரித்தால் "என்ன மாமா நீங்க வேஸ்டாயிருக்கீங்க...இவ எப்பவோ வந்தாச்சு பேரு கத்ரீனா கைப், நாலு ஒன்னுக்கும் ஒப்பேறாத படங்கள்ல நடிச்சிருக்கா...நீங்க வேற தலைவி கொலைவின்னு அகநானூறு மாதிரி புலம்பிகிட்டு ...சல்மான்கான் எப்பவோ உஷார் பண்ணிட்டான்"ன்னு காறித் துப்பிவிட்டார்கள். இதில வேற ஒருத்தன் அவளை எல்லாரும் கூப்பிடுகிறமாதிரி "கேட்"ன்னு செல்லப் பேரு வைச்சு வேறு விளிக்கிறான்.

"டேய் உங்க எல்லாருக்கும் அரும்பு மீசை முளைச்சு பெரிய பசங்களாயிட்டீங்க ஒத்துக்கறேன்...ஏதோ உங்க ரேஞ்சுக்கு எம்மா வாட்சன் படத்தை டெஸ்க்டாப்புல போட்டுக்கோங்க வேணாங்கலை..யார்கிட்டயும் வீட்டுல போட்டுக்குடுக்க மாட்டேன் ஆனா கத்ரீனா கைப்ப மட்டும் எவன் கம்ப்யூட்டர்லயாவது பார்த்தேன்...அப்புறம் பேஜாராகிடுவேன் நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு தானைத் தலைவியைக் கண்டுபிடிச்சிருக்கேன் அத்தோட இனிமே எவனாவது செல்லமா 'கேட்'டுன்னு கூப்பிட்டீங்க அப்புறம் நான் Dog-ஆ மாறிடுவேன்னு"னு குடும்பத்தில் சொத்தை பிரிப்பதற்க்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. தலைவிக்கு சொந்த ஊரு லண்டனாம். அடா அடா அடா....கேட் படம் ஒன்னு கிடைச்சா ஹாலில் ஜோராக மாட்டவேண்டும்.

சென்னை வலை மக்கள் வலை மக்கள் சந்திப்பு நல்லவேளை பிசுபிசுக்காமல் தப்பித்தது. அது பற்றி நிறைய சொல்லவேண்டுமாதலால் படங்களுடன் அடுத்த பதிவில்